பக்கம்:மறைமலையம் 29.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேளாளர் நாகரிகம்

231

வேள்விச்சடங்குகளின் இழிபும், அவர் வணங்கிய இந்திரன் வருணன் மித்திரன் மருத்துக்கள் முதலான சிறுதெய்வங்களின் சிறுமையும், அவர் தம்மைத் தேவரெனச் சொல்லிக் கொள்ளும் அகம் பிரமச்’ செருக்குரையின் இழுக்குந் தெரித்துக் கூறப் பட்டிருப்பதுடன், கொல்லாமை புலாலுண்ணாமை களியாமை என்னும் அறவேள்விகளின் உயர்வும், பிறப்பு இறப்பு இல்லாத் தனிமுதற்கடவுளான சிவத்தின் முழு முதற்றன்மையும், பிறந்து நோயாலுங் கவலையாலும் இடையிடையே மாய்ந்து போகும் மக்கள் பிரமம் ஆதல் செல்லாமையும், அன்பும் அருளும் மெய்யுணர்வின் முற்றுப்பேறும் உடையராய்ச் சிவபிரான் திருவடித் தொண்டில் இடையறாது நிற்பாரே மீண்டு வாரா வீட்டு நெறி தலைக்கூடிச் சிவத்தோடு இரண்டறக் கலக்குமாறும் வற்புறுத்துச் சொல்லப்படுதல் பகுத்தாராய்ந்து கொள்க.

இவ்வாறு ஆரியமொழியில் அதற்குரிய ஆரியரும் அதற்கு வேறான தமிழறிஞரும் இயற்றிய செய்யுட்களும் நூல்களும் ஒன்றோடொன்று விரவித் தலைமயங்கிக் கிடப்பினும், அவற்றுள் இவை ஆரியர் செய்தன, இவை தமிழர் செய்தன வென்று மேற்காட்டியவாற்றாற் பகுத்துணர்ந்து கோடல் எளிதேயாம். ஆரியர் செய்தவைகளில் ஆரியராகிய தம்மைப் பற்றிய உயர்வும், விலங்குகளைக் கொன்று வேட்கும் வெறியாட்டு வேள்விகளின் சிறப்பும் மயக்கந் தருஞ் சோமச்சாற்றின் பெருமையும், இந்திரன் வருணன் முதலான சிறுதெய்வ வணக்கமும், தமக்குந் தம் இழி செயல்களுக்கும் உடம்படாத தமிழர்களை இகழும் இகழுரைகளும் முழுமுதற் கடவுளாகிய சிவபிரானைப் பழிக்கும் பழிப்புரைகளும், இன்னும் இவை போன்றவைகளும் மலிந்துகிடக்கும் தமிழறிஞர் செய்தவைகளில் அன்பு அருள் என்னும் உயர்ந்த நெறிகளின் மாட்சியும் வெறியாட்டு வேள்விச் சடங்குகள் பயனிலவாதல் காட்டும் அறிவுரைகளும், உலகு உயிர் இறை என்னும் இவற்றின் உண்மைத் தன்மையை ஆராயும் ஆராய்ச்சிகளும், எல்லாம் வல்ல முழுமுதற் கடவுள் சிவம் ஒன்றே என்னும் மெய்யுரையும் பிறப்பு இறப்புக் கவலைநோய் முதலியவற்றிற் கிடந்துழலும் புல்முதல் மக்கள் தேவர் ஈறான எல்லா உயிர்களும் மாசு பொதிந்தனவா யிருத்தலின் அவை முதன்மையிலவாதல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/256&oldid=1591946" இலிருந்து மீள்விக்கப்பட்டது