பக்கம்:மறைமலையம் 29.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278

மறைமலையம் -29 -

என்றற் றொடக்கத்துத் தொல்காப்பியச் சூத்திரங்களால் ஐயுற வின்றித் துணியப்படும்; இவ்வாற்றால், தொல்காப்பியனார் காலத்துக்கு முற்றொட்டே தமிழ்நூல்கள் வரிவடிவில் எழுதப் பட்டு வந்தமை தேற்றமாம். ஆகவே, ஏட்டுச் சுவடிகளாயிருந்த தமிழ்மறைகளும் ஏனை எண்ணிறந்த தமிழ்நூல்களுங் கடல் வாய்ப் புக்கமையே உண்மை நிகழ்ச்சியாதற்கு ஏற்புடைத்து. மற்று ஆரியவேத காலத்தில் ஆரியர் தமது மொழியை எழுத்து வடிவில் எழுதத் தெரிந்தார் அல்லர்; அதனால் அவர் வேதப் பாட்டுகளையும் பிறவற்றையுங் கிடைகூட்டி நெட்டுருப் பண்ணியே பாதுகாத்து வந்தனர். அவர் அவர்களுடைய ஆரிய நூல்கள் ஏட்டுச் சுவடிகளாயிருந்ததேயில்லை. தம்முடைய நூல்களைக் கிடைகூட்டி நெட்டுருப்பண்ணிச் சொல்லும் ஆரியரது வழக்கம், அவ்வாரியரை முழுதும் பின்பற்றிய பார்ப்பனர்பால் இன்றும் நடைபெறக் காணலாம். இங்ஙனம் ஏட்டுச்சுவடிகளாயில்லாமல், ஆரியர் தம் நினைவளவாய் வழங்கிய ஆரியவேதங்கள் கடல்வாய்ப் புகுதல் ஆகாமையாற் கடல் கொண்டு மறைந்தன தமிழ்மறைகளோயாமென்பதூஉம் அங்ஙனம் மறைந்த தமிழ்மறைகளையே இறைவன் மக்கள் உய்யவேண்டி ஆசிரியர் திருவள்ளுவநாயனார் வாயிலாக வெளிப்படுத்தருளினா னென்பதூஉம் அறியப்படும். தமிழ் மறைகள் வழங்கிய காலத்து உடன் வழங்கி, அவற்றின் பொருள் களை இலக்கண வகையால் விரித்தோதிய தொல்காப்பியம் ஒன்றுமே, அம் மறைகளின் பழைய வழிநூலாய் இப்போ தெஞ்சிநிற்பதாகும். மற்றுத் திருக்குறளோ அம் மறைகளுக்குப் பின் அவற்றின் பொருள்களை ஆண்டுள்ளவாறே பெரும் பாலும் எடுத்து இலக்கியவகையால் விளக்குவதாகும் என்று உணர்ந்து கொள்க.

அற்றேல், தமிழ்நான்மறைகள் வழங்கிய காலத்து உடன் வழங்கிய தொல்காப்பியங் கடல்வாய்ப்படாமல் இன்றுகாறும் வழங்கிவராநிற்ப, அத் தமிழ்மறைகள் மட்டுங் கடல்வாய்ப் புக்கது என்னையெனின்; அறம் பொருள் இன்பம் வீடு என்னும் உறுதிப்பொருள் நான்கில் இலக்கண வகையாலும் இலக்கிய வகையாலும் அரிதுணர் பொருளனவாய்க் கிடந்த அரும் பொருள்களை அவை தம்மை ஆராவேட்கையோடு ஏற்றுப் பயன்படுத்தத் தக்கார்க்குமட்டும் மறைவாய் அறிவுறுத்துவனவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/303&oldid=1592055" இலிருந்து மீள்விக்கப்பட்டது