பக்கம்:மறைமலையம் 29.pdf/319

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294

-

மறைமலையம் 29

தமிழர்க்குள்ள பெருமையெல்லாம் அவர் தொன்று தொட்டுத் தூய்தாக வழங்கிவருந் தமிழ்மொழி யினையே சார்ந்திருக்கின்றது. ஆனால், இப்போதுள்ள தமிழர்களோ அப்பெருமையினை யறியாராய்த், தண்ணீரைத் 'தண்ணீர்' என்றுஞ் சோற்றைக் ‘சோறு' என்றுந் தமிழாற் சொல்வது தாழ்வென நினைந்து அவற்றை 'ஜலம்' 'சாதம்' என்று சொல்லாற் கூறுதலே பெருமையெனக் கருதுகின்றார்கள். இங்ஙனங் கருதுவது தம்மைத்தாமே இழிவுபடுத்திக் கொள்வதாய் முடிவதை எண்ணிப் பார்க்கின்றார்களில்லை. தமக்குரிய ‘தண்ணீர்’, ‘சோறு' எனுந் தூய தமிழ்ச்சொற்கள் இழிந்தவை களாய் இருப்பினல்லவோ, அவற்றையொழித்து, வடசொற்களை யெடுத்து வழங்கல் வேண்டும்! இளங்குழவிகளாய்ப் பால் பருகிய காலந்தொட்டு நாம் வழங்கி வந்த அத் தனித் தமிழ்ச் சொற்கள் எங்ஙனம் இழிந்தவைகளாகக் கூடும்? அவற்றை வழங்கிய நாம் இழிந்தவர்களாய் இருப்பினல்லவோ அவையும் இழிந்தனவாயிருக்கும்?

உலகத்திலுள்ள மற்ற மகக்ளெல்லாம் உண்ணச் சோறும் உடுக்கக் கூறையும் இன்றி, விலங்கினங்களைக் கொன்று உண்டுந், தழைகளை யுடுத்தும், ஊர் ஊராய் அலைந்து திரிந்த அத்துணைப் பழையகாலத்திலும், அறிவு முதிர்ச்சியுந் தாளாண்மையும் உடையராய் நிலத்தைத் திருத்திப் பல்வகை வளவிய உணவுப் பண்டங்களை விளைவித்து, நாடு நகரங்கள் வகுத்து, நாகரிகத்திற் சிறந்து திகழ்ந்த தமிழ்ச்சான்றோர் மரபில் வந்த நாம் இழிந்தோராதலும் நம் தனித்தமிழ்ச் சொற்கள் இழிந்தவையாதலும் யாங்ஙனம்? தாம் ஏதொரு நன்முயற்சியுந்

செய்யாமலுஞ், சய்து பொருள் ஈட்டிப் பிறரைப்

பாதுகாவாமலும், முயற்சி மிக்காரை யேமாற்றி அவர் தரும் பொருளைக் கொண்டு வயிறு கழுவுவாரல்லரோ இழிஞர்? அவர் பேசுஞ் சொற்களல்லவோ இழிந்தனவாகும்? மேலும், வடமொழியானது எவரானும் பேசப் படாமல் எத்தனையோ ஆயிர ஆண்டுகளுக்கு முன்னரே இறந்து பட்டதொன்று.நமது அருமைச் செந்தமிழ் மொழியோ பல்லாயிர ஆண்டுகளாக நடைபெற்றுத், தனது புத்திளமை குன்றாது இன்றும் உலவுவது. இங்ஙனம் வாழ்நாள் வரவரப் பெருகி வழங்குந் தமிழ்மொழி சிறந்ததோ? குறுகிய வாழ்க்கைத்தாய் முன்னரே இறந்தொழிந்த வடமொழி சிறந்ததோ? நடுநிலையுடையீர் ஆராய்ந்துரைமின்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/319&oldid=1592136" இலிருந்து மீள்விக்கப்பட்டது