பக்கம்:மறைமலையம் 29.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7

பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்*

மனவியற்கையினும் உடல் அமைப்பினும் மற்றை வழக்க ஒழுக்கங்களினுந் தம்முட்பெரிதும் வேறுபட்ட மக்கட்சாதியுள் தமிழரும் ஆரியரும் எனப்படுகின்ற இவ்விருதிறத்தினருந் தமக்குள் எவ்வாற்றானும் வேறுபடுதல் போல ஏனைப் பிறர் அங்ஙனம் முரணி நிற்றல் ஆராய்தற்குச் சிறப்புடைத்தென்று தோன்ற மாட்டாது. இவ்விருசாதியாரும் பண்டை நாளில் நிரம்பவும் மாறுபட்டு நின்றவாறு போலப், பின்றை நாளில் மிகவும் ஒருமைப்பட்டு இவர் தமிழர் இவர் ஆரியர் என்று பகுத்துணர் தற்கு அரியராய் வாழ்ந்து வருகின்றார். இங்கே தமிழர் என்று குறிப்பிடப்பட்டோர் தமிழ்மொழி வழங்குவோர் என்று கொள்ளற்க. பிற்றைஞான்று தமிழரும் ஆரியரும் வேற்றுமை தோன்றாவாறு கலந்து ஒருவர்க்குரிய

மொழியினையும் வழக்க வொழுக்கங்களையும் ஏனையோர் பின்பற்றிப் போதருகின்றா ராகலின், இவர் தம்முள் வழங்கும் மொழியினை ஓர் அடையாளமாகக் கொண்டு இவர் தம்மைத் தமிழர் ஆரியர் என்று பகுத்துரைத்தல் ஒரு சிறிதும் பொருந்தாது. பண்டைக்காலத்துத் தன்னந்தனியராய்த் தன்றிசைக்கண் வாழ்ந்து தமக்குரிய ஒழுக லாற்றினைப் போற்றித் தமிழ்வழங்கிய முதுமக்களின் இரத்தக் கலப்பிற் றிரண்டெழுந்து போதருகின்ற வழி முறையாரே பிற்றைஞான்று தமிழர் எனப்பெயர் பெறுதற்கு உரிமையுடையா ரென்பதும், அவ்வாறே முன்னை நாளில் ஆசியாக்கண்டத்தின் வடக்கே யுள்ள வடநாடுகளில் வசித்துக் கொண்டு ஆரியமொழி வழங்கிய முதுமக்களான ஆரியர்மாட்டுத் தோன்றிய வழிமுறையாரே பின்னாளில் ஆரியரென்று பெயர் பெறுந் தகுதியுடையா ரென்பதும் ஈண்டு உணரற் பாலனவாம். பலநூற்றாண்டுகளுக்கு முன்னரே தமிழரும் ஆரியரும் ஒருங்கு கலந்தமையாற் றோன்றி வழி முறைப்பாகுபா டுடையராய்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/32&oldid=1591695" இலிருந்து மீள்விக்கப்பட்டது