பக்கம்:மறைமலையம் 29.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டைக்காலத் தமிழரும் ஆரியரும்

39

பெருமை குன்றுமாறில்லை. பரப்பிரமப்பொருள் நிலையறிய மாட்டாத அறிவில்லாப் பிள்ளைமைப் பக்குவத்தின் கண்ணரான ஆரியமக்கள் செய்த அவ் விருக்கு வேதத்திற் கழிபெருநுண்ணறிவாற் றமிழ்நன்மக்களறிந்த அம்முழுமுதற் பொருள் நிலை எவ்வாறு காணப்படும்? சிறார் இழைத்து விளையாடும் மணற்சிற்றிலிலே நுண்ணறிவுவாய்த்த தச்சரியற்றும் அழகிய மாடங்கள் காணப்படதலுண்டோ? எந்த நுண்பொருள் எவர் வயின் வருமோ அஃது அவர்பாலே ஆராயற்பாலதாம். அஃதொழிந்து ஓர் அறிவுடையாரிடத்துப் பெறப்படும் ஓரரும் பொருளை ஏனையோர் அறிவிலாரிடத்துக் கேட்க முந்துவாரைப்போல் தமிழ் நூற்களிற் குறிக்கப்படும் அந்தரங்க மெய்ப்பொருட்குப் பிரமாணம் வடநூலிற் றேடுதல் பெரிதும் நகையாடி இகழற்கே ஏதுவாம். இவ்வாற்றால் யாம் வடநூல்களை இகழ்கின்றேம் என்று நினையன்மின்! யாம் அவற்றின் உண்மைத்தன்மை கூறியதே யன்றிப் பிறிதில்லை. இனி வடநூலிற் சிறந்த நுண்ணறிவு காணப்படும் சாங்கியம், உபநிடதம், வேதாந்த சூத்திரம், சிவாகமம் முதலியவற்றை இங்ஙனந் தாழ்த்துக் கூறுதற்கு யாம் ஒரு சிறிதும் ஒருப்படேம் ஒருப்படேம்.

னி அவ்விருக்குவேதத்திற் போந்த அப் பல்தேவர் வழிபாடேனும் விழுப்பமுடையவா வென்று ஒருசிறிது ஆராய்வாம். மதுக்களிப்பை விளைத்து அறிவை மயக்கி மழுக்கும் சோமரசபானத்தைச் சிறப்பித்துப் புகழ்ந்த பதிகம் ஒன்றனை இங்கே மொழி பெயர்த்து வரைகின்றோம்; அது காண்டு அவ்விருக்கு வேதப்பான்மை அறிவுடையார்க்கு எல்லாம் இனிது விளங்கக்கிடக்கும்.

இருக்குவேத ஒன்பதாம் மண்டிலம், முதற்பதிகம் சோமபவமானம்

இந்திரன் பருகுதற்பொருட்டு நறுக்கிப்பிழிந்த ஓசோமரசமே! மிகத் தித்திப்பதாய் மகிழ்ந்த செலவினை யுடைய நீரோடைபோல் சுத்தமாய் நின்வழியே ஒழுகுக.

(1)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/64&oldid=1591727" இலிருந்து மீள்விக்கப்பட்டது