பக்கம்:மறைமலையம் 29.pdf/94

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதி வேற்றுமையும் போலிச்சைவரும்

69

காண்கின்றனம் அல்லமோ? உணவு சிற்றுண்டிவிற்றலாலும், இசைபாடு தலாலும், சோதிடஞ் சொல்லுதலாலும், சம்பளம் பெற்றுக் கொண்டு பிறர்க்குக் கல்வி கற்பித்தலாலும் உயிர் பிழைப் போர் பார்ப்பனர் ஆகமாட்டார், அவர் மிக இழிந்தோரே யாவர் என்று மனமிருதி (3,152,155,156,162) நன்கு வலியுறுத்திச் சொல்லியும், இப்போது இத்தகைய தொழில் களைச் செய்து வயிறு வளர்த்தலே அவர்கட்கு இயற்கையாய் வந்து விட்டதன்றோ? இன்னும் ஆவின் (பசுமாட்டின்) இறைச்சியைத் தின்று உயிர்வாழ்தல் பண்டைக்காலத்திருந்த பார்ப்பனர்க்கு வழக்க மாயிருந்த தென்று ‘தைத்திரீயசங்கிதை, கு 7,1, 4' விளக்கமாகச் சொல்லியும், அதற்கு ஒப்ப இன்று காறும் வடநாட்டின்கண் உள்ள பார்ப்பனர்கள் மீன் மறி முதலியவற்றின் ஊனை வெளிப்படையாகத்தின்று உயிர் வாழாநிற்பவும், தென்னாட்டிற் புகுந்து குடியேறிய பார்ப்பனர் மட்டும் இங்குள்ள சைவ வேளாளர்களின் புலால் உண்ணா அருளொழுக்கத்தைக் கண் தாமும் தமது பழைய புலைத்தொழிலைக் கைவிட்டுப், புலால் உண்ணாப் புதிய நடையைக் கைக்கொண்டு ஒழுகுதல் எல்லாரும் அறிந்த தொன்றன்றோ? இவ்வாறு பார்ப்பனர்கள் தமக்கு உரிய பழைய வழக்க ஒழுக்கங்களைக் கைவிட்டு, இக்காலத்துக்கு ஏற்ற வழக்க ஒழுக்கங்களையும் நடையுடை சாயல்களையும் கைப்பற்றி உயிர் வாழ்தல் போலவே, மற்றை வகுப்பினருந் தத்தமக்குரிய பழைய தொழில்களையும் முறைகளையுங் கை விட்டுப் புதிய தொழில் களையும் முறைகளையும் கைப்பற்றி நடந்து வருகிறார்கள். உழுதுண்ணும் வேளாளரிற் பலர் அவ்வுழுதொழிலைவிடுத்துப், பற்பல கைத்தொழில்களிற் புகுந்திருக்கிறார்கள். உழுவித் துண்ணும் வேளாளரிற் பலர் தேவார திருவாசகம் ஓதல், தமிழ் நூல்கள் கற்றல் கற்பித்தல், சிவபிரானுக்கு வழிபாடு ஆற்றல், திருக்கோயிற்றொண்டு புரிதல், அரசரின் கீழ் அமைச்சராயும் பிறராயும் அலுவல் பார்த்தல், அயல்நாடுகளிலும் தம் நாடுகளிலும் உள்ள பண்டங்களைக் கொண்டுவிற்றல், கற்றோர்க்கும் இரவலர்க்கும் வேண்டிய உதவிகளைச் செய்தல், தமிழையும் சைவத்தையும் வளர்த்தல் முதலான தமக்குரிய விழுமிய செயல்களைக் கைந்நெகிழவிட்டுக், கல்வியறிவும் சிவநேயமும் இலராய், அவையில்லாமையால் அரசர்க்கும் உலகினர்க்கும் பயன் படாராய்த், தம் வயிறு வளர்த்தற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_29.pdf/94&oldid=1591758" இலிருந்து மீள்விக்கப்பட்டது