பக்கம்:மறைமலையம் 3.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68



10. ஹாம்லெத் அரசரின் ஆவிவடிவம்

டென்மார்க் தேசத்து அரசனான ஹாம்லெத் என்பவன் மிகவும் நல்ல குணங்கள் அமைந்து செங்கோல் செலுத்தி வந்தான். இவ்வரசன் பட்டமகிஷியான ஜெர்ட்டூர்ட் என்பவள் வயிற்றில் இவ் வரசனுக்குள்ள எல்லா நற்குணங்களும் ஒருங்கு பாருந்தபெற்ற ஓர் அழகிய புதல்வன் பிறந்து வளர்ந்து நல்ல வாலிபப்பருவத்தோடும் விளங்கினான். அவ்வாறு நிகழுங் காலத்தில் இவ் வரசனுடைய சகோதரனான கிளாடியஸ் என்பவனுக்கும் அரசன் மனைவிக்கும் இரகசியத்தில் நேசம் உண்டாகி நாளுக்குநாள் முதிர்ந்து வந்தது. இந்தத் துரோகியான சகோதரன் அரசன் மனையாளைக் கவர்ந்து கவர்ந்துகொண்ட மல்லாமல், அரசனைக் கொன்று இராச்சியத்தையும் அபகரித்துக்கொள்ள எண்ணினான். இஃது இப்படியிருக்க அரசனான ஹாம்லெத் திடீரென இறந்து போனான். அரசன் சோலையிற் படுத்து உறங்குகையிற் பாம்பு கடித்து இறந்துபோனான் என்று எங்கும் பேச்சுண்டாயிற்று. அரசன் இறந்த இரண்டு மாதத்திற்குள் எல்லாம் அவன் சகோதரனான கிளாடியஸ் அரசன் மனைவியை மணம் செய்துகொண்டு சிங்காதனம் ஏறி அரசு புரிவானாயினான். இறந்துபோன அரசன் மகனான இளைய ஹாம்லெத் மாத்திரம் தன் தந்தை திடீரென்று இறந்துபோனதையும், தன் தந்தைபால் மிக்க அன்புடைய மனைவியாய் ஒழுகிய தன் தாயான ஜெர்ட்டூர்ட் தன் சிற்றப்பனைக் கணவன் இறந்த இரண்டு மாதத்திற்குள் கலியாணஞ் செய்துகொண்டதையும் எண்ணி எண்ணி மனம் அழிந்து ஆறாத்துயர்க்கடலில் அழுந்தினவனாய்ச் “சாந்த குணத்திற்கு இருப்பிடமான என் அருமைத் தந்தையைக் கொன்ற பாம்பு என் சிற்றப்பனே. என்றந்தையைக் கடித்த பாம்பு இப்போது சிங்காதனத்தின்மேல் இருக்கின்றது,” என்று கருதித் தந்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/101&oldid=1623379" இலிருந்து மீள்விக்கப்பட்டது