பக்கம்:மறைமலையம் 3.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
69

இறந்தநாள் முதல் துயரமிகுந்து தன் மனக் கிளர்ச்சியையும் நகைமுகத்தையும் இழந்தான். உலகமெல்லாம் அவனுக்குவெறும் பாழாய்த் தோன்றியது. இவன் அன்னையும் சிற்றப்பனும் இவனை உற்சாகப்படுத்த மிக முயன்று பார்த்தும் அது சிறிதுங் கைகூடவில்லை. இஃது இவ்வாறிருக்க, அரண்மனைக்கு எதிரேயிருந்த மேடைமேல் காவற்காரர் காவலிருக்கும் நாட்களில் ஒரு நாட் பாதி இரவில் ஓர் உருவம் அவர்கள் கண்ணுக்குத் தென்பட்டது. இறந்துபோன ஹாம்லெத் அரசன் தரிக்கும் வழக்கப்படியே அஃது உச்சி முதல் உள்ளங்கால் வரையில் இருப்புச் சட்டை அணிந்திருந்தது. அதன் முகமோ வெளுத்து விசனமுங் கோபமுங் கலந்த குறியோடு தோன்றியது; அதன் தாடியோ பார்ப்பதற்குப் பயங்கரமாய் அரசன் உயிரோடிருந்த நாளிற் கண்டது போலவே கருமையும் வெண்மையுங் கலந்ததாயிருந்தது. கடிகாரத்திற் பன்னிரண்டு மணி அடித்தவுடனே அது தோன்றியது. இங்ஙனம் மூன்றுநாள் தொடர்ச்சியாகத் தோன்றியதாயினும், காவற்காரர்கள் அதனுடன் பேசியும் அது மறுமொழி ஒன்றுஞ் சொல்லவில்லை. ஆனால், ஒருமுறை அது தம்மோடு பேசுதற்குத் தலையை நிமிர்த்தி அசைத்த சமயத்தில் கோழி கூவிப் பொழுது விடிந்தமையால் அது மறைந்துபோயிற்றென்று காவற்காரர்கள் அறிவித்தார்கள்.

இளவரசன் இவர்கள் சொல்லியதைக் கேட்டுப் பெரியதொரு வியப்படைந்தான். சொல்லியது ஒவ்வொன்றும் மிகவும் பொருத்தமாக இருந்தமையால் அது நம்பக்கூடாததாகவும் இல்லை. ஆகவே, அன்றிரவு போர்ச்சேவகர்களுடன் தானுங் காவலிருக்குமிடஞ் சென்று காத்திருந்தால் தானும் அவ்வுருவத்தைக் காணக்கூடும் என்றும், அங்ஙனம் அவ் வுருவம் தோன்றுவது ஏதோ தெரிவிக்க வேண்டுவதற்கே யல்லாமல் வீணாக அன்று என்றும், இதுவரையில் அது வாய்திறவாமற் போனாலும் தன்னைக் கண்டவுடன் அது பேசும் என்றும் தனக்குள் ஆராய்ந்து அறிந்தான். எப்போது இரவு வரும் வரும் என்று மிகவும் ஆத்திரத்தோடு எதிர்பார்த்திருந்தான்.

இராக்காலம் வந்தவுடன் ஒரேஷியா, மார்சிலஸ் என்பவர்களுடன் காவலிடத்திற்குப் போய், அவ் வுருவந் தோன்றும் மேடைமேற் போயிருந்தான். அன்று இரவு குளிர் மிகுந்திருந் தமையாலும், மேல்வீசுங் காற்றுச் சில்லென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/102&oldid=1623696" இலிருந்து மீள்விக்கப்பட்டது