பக்கம்:மறைமலையம் 3.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
71

சிறிதும் மாற்றமாட்டா வாயின; ஏனென்றால் அவன் தன் உயிரை இழப்பதுபற்றிச் சிறிதுங் கவலைப் படவேயில்லை. மேலும், தன் உயிர் என்றும் அழியா நிலைமைத்தாகலின் அதற்கு அவ் வாவேசம் யாது தீங்கு இழைக்க வல்லதாகும்? என்று அவன் தனக்குட் சிந்தித்துப் பார்த்து அவர்கள் எவ்வளவு தடுத்துங் கேளாமல் அஃது எங்கே அவனைப் போகும்படி ஏவியதோ அங்கே சென்றான். இருவருந் தனியேயிருக்குமிடம் வந்ததும் அவ் வாவேசம் வாய்திறந்து “குரூரமாகக் கொலை செய்யப்பட்டயான், நின் தந்தை ஹாம்லெத்தின் ஆவி. நீ முதலிற் சந்தேகித்தபடியே நின் சிற்றப்பனான கிளாடியஸ், தன் தமையன் சிங்காதனத்தில் ஏறுதற்கும் தன் தமையனான ஹாம்லெத் அரசனைக் கொலை செய்தான். அக் கொலை எவ்வாறு நடந்ததெனிற் கேள் : அரசன் : வழக்கப்படி பிற்பகல் தோட்டத்தே உறங்குகையில், துரோகியான அவன் தம்பி அங்கே திருட்டுத்தனமாய்ப் புகுந்து நச்சுப் பூண்டின் திராவகத்தை அவன் காதில் ஊற்றினான். அத் திராவகம் மனிதனுடைய உயிருக்கு மிக்க பகையாகையால் பாதரசம்போல அஃது உடம்பிலுள்ள இரத்தக்குழாய்கள் எல்லாவற்றிலும் அதிவேகமாகப் பரவி இரத்தத்தை இரத்தத்தை உறிஞ்சி உறிஞ்சி உடம்பின் மேலெல்லாம் குட்டம் பிடித்தாற்போலச் சிதல் சிதலாகச் செய்து, அவனுடைய உயிரை மனைவியினின்றும் அரசாட்சியினின்றும் பிரித்துக் கொள்ளை கொண்டு போயிற்று. நீ தந்தையை அன்புடன் நேசித்தது உண்மையாயின் நீ அவனைப் பழிக்குப்பழி வாங்க வேண்டும்,” என்று அவனுக்கு ஆணையிட்டுக் கற்பித்தது. பின்னும் அஃது அவனிடத்தில் அவன் றாய் தன் கற்பு நிலை வழுவித் தன் முதற் கணவனுக்குப் பொய்யாளாய்ப் போன தல்லாமலும், அவனைக் கொன்றவனை மணஞ் செய்து கொண்டது பற்றியும் மிகப் புலம்பியது; என்றாலும் அவன் தன் சிற்றப்பனைப் பழிக்கு பழிவாங்க எவ்வளவு முயன்றாலும் முயல்க, தன் அன்னைக்கு மாத்திரம் எத்தகைய தீங்கும் இயற்றலாகாதெனவும் அவளை மறுமையிற்றேவதண்டனைக்கும் இம்மையில் தன் மனச்சான்றின் தண்டனைக்கும் விட்டு விடுதலே சால்புடைத்தா மெனவுஞ் சொல்லித் தன் புதல்வனை எச்சரித்தது. இளவரசனான ஹாம்லெத், ஆவிவடிவமாகத் தோன்றி இங்ஙனம் உரைத்த தன் தந்தைக்கு அவ்வுரைப்படியே நடப்பதாக வாக்களித்தவுடனே அவ்வாவேசம் மறைந்து போயிற்று. அதன்பின் நடந்தவை இவ் விஷயத்திற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/104&oldid=1623390" இலிருந்து மீள்விக்கப்பட்டது