பக்கம்:மறைமலையம் 3.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

73


11. கொலையைக் காட்டிய
குறவன் ஆவேசம்

சேலம் சில்லாவில் அனங்கூர் என்னும் ஓரிடம் இருக்கின்றது. அவ்வூரில் நாலைந்து குறவர்கள் ஒன்றாகச் சேர்ந்து கொண்டு வழிப்பறி கொள்ளையிடுதல், கொலை செய்தல் முதலிய மிகக் கொடிய செய்கைகளை நெடுநாளாகச் செய்துகொண்டு, அரசாங்கத்துச் சேவகர் கைக்கும் அகப்படாமல் நெடுநாளாகத் தப்பி வந்தார்கள். இவ்வாறு நடந்து வருகையில் அக்குறவர் ஐவரில் ஒருவன் திடீரென்று காணாமற் போயினான். அரசாங்கத்துக் காவற் சேவகர்கள் அவ்வழிப்பறி கொள்ளை நடக்கும் பாட்டையில் இராக்காலத்தே போய் அலைந்து திரிவது வழக்கம். ஒரு நாள் ஒரு சேவகன் நிலவெரிக்கும் இரவில் வழக்கம்போலத் தனியனாக யாரும் நடவாத ஒரு பாட்டையில் போய்க்கொண்டிருக்கும் பொழுது, அவனுக்கு எதிரே ஒரு மரத்தின் நிழலிலே ஒரு மனிதன் தன்னந்தனியாக நின்றுகொண்டிருக்கக் கண்டான். கண்டதும் கடுக நடந்து அம்மனிதனருகிற் போய்ப் பார்க்க அவனொரு குறவனாகக் காணப்பட்டான். நெடுநாளாக அப்பக்கங்களில் வழிப்பறி கொள்ளை செய்யும் குறவர்களில் இவன் சேர்ந்தவனாக இருக்கவேண்டுமென்று தனக்குள் எண்ணி அச்சேவகன் அவனைப் பிடித்துக்கொள்வதற்குக் கையை நீட்டி அக்குறவன் கையைப் பிடித்தான்; அக்குறவன் கை கண்ணுக்கு மாத்திரம் தோன்றியதேயல்லாமல் சேவகன் கைக்கு அகப்படாமல் காற்றைப்போலிருந்தது; இதைப் பார்த்ததும் சேவகன் மிகவும் வெருண்டு ‘இஃது ஏதோ பேய் வடிவமாக இருக்கின்றது.’ என்று அஞ்சி நின்றான். இதற்குள் குறவன் வடிவாக நின்ற அவ் ஆவேசம் அச்சேவகனுக்குச் சைகைசெய்து அவனைத் தன்னுடன் பின்றொடர்ந்து வரும்படி அழைத்தது. அது சொல்லியபடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/106&oldid=1623397" இலிருந்து மீள்விக்கப்பட்டது