பக்கம்:மறைமலையம் 3.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
74

❖ மறைமலையம் -3 ❖

செய்யாக்கால் அஃது என்ன தீமை செய்யுமோ என்று அஞ்சினவனாய் அவன் அதன் பின்னாலே போக, அது பெரும்பாட்டையினின்று பிரியும் ஓர் ஒற்றையடிப் பாதையின் வழியாக அவனை அழைத்துக்கொண்டு சிறிது தூரம் போய் நாகதாளிச் செடி மிகுதியாய் அடர்ந்துள்ள ஓரிடத்திற் சென்று, அச்செடிகளின் நடுவே சந்து வெளியாக இருந்த ஓர் இடத்தைக் காட்டி நின்றது. அது காட்டிய அவ்விடத்தைத் தானாகவே தோண்டிப் பார்க்க அஞ்சித் தன்னோடுள்ள சேவகர்களிற் சிலரையும் சேர்த்துக்கொண்டு வந்து அவ்விடத்தைப் பரிசோதிக்கலாமென்று அங்கே அடையாளக் குறி ஒன்று செய்துவைத்தான். சேவகனுடைய குறிப்பைத் தெரிந்து கொண்டவுடனே அவ்வாவேசம் மறைந்துபோயிற்று. அது மறைந்துபோனதும் சேவகன் இஃது ஏதோ அற்புதமாக இருக்கின்றது! இந்தப் பேய் ஏதோ ஒரு முக்கியமான செய்தியை நமக்குத் தெரிவிக்க வந்திருக்கின்றது, என்று தனக்குட் சிந்தித்த வண்ணமாய் திரும்பித் தானிருக்குமிடம் வந்து, தன் சேவக நண்பரிற் சிலருக்கு முன்னாளிரவு நடந்த வரலாற்றை அறிவித்து, அப்பேய் காட்டிய இடத்திற்கு அவர்களைத் தன்னுடனே வரும்படி கேட்டான். அவர்களும் அதற்கு இசையவே, மறுநாட் காலையில் தான் அடையாளம் இட்டு வந்த அவ்விடத்திற் சென்று அங்கே நிலத்தை அகழவும், அதனுள் ஒரு பிணம் இருந்தது. அப்பிணத்தை வெளியே கிடத்திப் பார்க்கையில் முன்னாளிரவு தோன்றிய பேயின் வடிவத்தை ஒத்த குறவன் உடம்பாயிருந்தது. அப்பிணம் உடம்பெங்குங் கத்தியாற் பலவாறு வெட்டப்பட்டு இருந்தமையால், அச்சேவகர்கள் “தங்களோடு இணங்கி வராமையால் மற்றக் குறவர்கள் இக்குறவனைக் கொன்று இங்கே புதைத்துப் போய் விட்டார்கள்; இக்குறவனுடைய ஆவேசம் தன்னைக் கொலை செய்தவர்களை வெளிப்படுத்திப் பழிக்குப்பழி வாங்க வேண்டுமென எண்ணித்தான் அப்படித் தோன்றி இதனைக் காட்டிக் கொடுத்தது,” என்று தமக்குள் முடிவு செய்து காண்டு, அக்குறவனைக் கொன்ற மற்றக் குறவர்களைக் கண்டு பிடிக்கும்படி அன்றைப் பகலெல்லாம் முயன்றும் சிறிதும் அவர்கள் முயற்சி பயன்படவில்லை. அதன்மேல் அவர்கள் ‘இன்றிரவு நாம் இவ்விடம் வந்திருப்போமானால் நேற்றுத் தோன்றிய ஆவேசமே திரும்பவுந் தோன்றி நமக்கு ஆட்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/107&oldid=1623398" இலிருந்து மீள்விக்கப்பட்டது