பக்கம்:மறைமலையம் 3.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
75

இன்னார் என்பதையுங் காட்டிவிடும்’ என்று தீர்மானித்து அன்றிரவு அங்கே போயிருந்தார்கள்.

அவ்வாறு அவர்கள் அங்கிருக்கையில் நடு இரவில் அவ்வாவேசம் தமக்கெதிரே வரக் கண்டார்கள். முதல் நாளில் அதனைக்கண்ட சேவகன் அதன் அருகிற் போய் ‘உன்னைக் கொலை செய்தவர்கள் இன்னாரென்றும் அவர்கள் இவ்விடத்தில் இருப்பவர்களென்றும் யாங்கள் தெரிந்து கொள்ளக் கூடவில்லையே’ என்றான். அதன்மேல் அந்தப் பேய் அவனைத் தன் பின்னே வரும்படி குறி காட்டிற்று. அதற்கு இசைந்து அவன் அதன் பின்னே போக அவன் நண்பரும் அவனைப் பின் தொடர்ந்து சென்றார்கள். இப்பேய் பல விடங்களும் தாண்டி அவர்களை அழைத்துப் போய்த் தன்னைக் கொலை செய்த குறவர்கள் இருக்கும் குடிசைகளின் எதிரே போய் நின்றது. உடனே சேவகர்களெல்லாம் மிகுந்த எச்சரிக்கையோடும் அக்குடிசைகளின் உள் நுழைந்து அங்கிருந்த குறவர் பிடித்துக்கொண்டார்கள். அதன்பின் அவ்வாவேசம் மறைந்துபோயது. பிடிக்கப்பட்ட அப்பொல்லாத குறவர்களைக் காவற் சாலைக்குக் கொண்டுவந்து நன்றாகப் புடைக்கவே, அவர்கள் நடந்த உண்மைகளையெல்லாம் வெளிப்படுத்திவிட்டார்கள். அவர்கள் வாய்ப்பிறப்பிற் றெரிந்த உண்மைகளில் இஃது ஒன்று. கொலை செய்யப்பட்ட குறவன் தம்மவர்களில் ஒருவன் என்றும், ஆனால், அவன் தாங்கள் செய்யப்போகும் ஒவ்வொரு தீய காரியங்களையும் செய்ய வேண்டாமென்று தடுப்பவனென்றும், ஒருநாள் தாங்கள் மிகுந்த பொருள் எடுக்கக்கூடிய ஓரிடத்தைக் கொள்ளையிட்டு அங்குள்ளவர்களையெல்லாம் கொன்றுவிட வேண்டுமெனத் தீர்மானித்த போது அவன் அதற்கு இணங்கி வராமல் மிகவுந் தடை செய்தமையால் தாங்கள் அவனைக் கொலை செய்ய நேர்ந்ததென்றும் சொன்னார்கள். பிறகு அவர்களை நியாயமன்றில் செவ்வையாக விசாரித்து அவர்கட்கு மரண தண்டனை விதிப்பித்தார்கள். இதிற் சம்பந்தப்பட்ட பெருங் குற்றவாளிகள் நெடுநாள் சேவகர் கைக்ககப்படாமற் றப்பியும், கடைசியாக அப்பேய் வடிவத்தால் நன்கு காட்டிக் கொடுக்கப்பட்டார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/108&oldid=1623399" இலிருந்து மீள்விக்கப்பட்டது