பக்கம்:மறைமலையம் 3.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
76

❖ மறைமலையம் -3 ❖

மேலே காட்டிய உண்மை வரலாற்றினால் நல்லவன் ஆவேசம் தானே கொலைஞரை வருத்தாமல் நீதி செய்வார் வாயிலாகவே அவர்களைத் தண்டிக்குமென்பது நன்கு பெறப்பட்டது. அக்குறவர்களின் வாய்ச்சொற்களினாலே கொலைசெய்யப்பட்ட குறவன் நல்ல குணம் வாய்ந்தவன் என்பது ஐயமின்றி அறியப்படுகின்றது.

இனிக் கொலை செய்யப்பட்டவர் தாம் இறக்குங் காலத்துத் தம்மைக் கொன்றவரை எவ்வாறு தண்டிக்க வேண்டுமென எண்ணுகின்றனரோ அவ்வாறே தாம் இறந்து சூக்குமசரீரத்திற் போனவுடன் அவர்களைத் தண்டிக்க வல்லராவர். பிறராற் கொலைசெய்யப்பட்டாலும். அன்றித் தாமே தற்கொலை செய்து கொள்ளும்வண்ணம் பிறரால் மிகத் துன்புறுத்தப்பட்டாலும் இறக்குங்காலத்து அவர் எங்ஙனம் நினைத்தாரோ அங்ஙனம் பின்னால் நிறைவேற்றக்கூடிய ஆற்றல் அவர்க்குச் சூக்கும சரீரத்தில் உண்டாகின்றது. இதற்கு நாகபட்டினத்திற் சில ஆண்டுகளுக்குமுன் நடந்த ஒரு நிகழ்ச்சியை உதாரணமாக இங்கே எடுத்துக் காட்டுகின்றோம். இவ்வரலாற்றிற் சம்பந்தப்பட்டவர்கள் பெயர் இருப்பிடம் முதலியவற்றை எடுத்துச்சொன்னால் உயிரோடிருக்கும் அவர்கள் சந்ததியார்க்கு அது மிக்க மனவருத்தத்தை உண்டு பண்ணுமாகையால் அவற்றைக் காட்டாமல் நடந்த வரலாற்றை மாத்திரம் கூறிச் செல்வாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/109&oldid=1623400" இலிருந்து மீள்விக்கப்பட்டது