பக்கம்:மறைமலையம் 3.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

77



12. பழிக்குப் பழி வாங்கின ஓர் ஆவேசம்

நாகபட்டினத்தில் சில ஆண்டுகளுக்குமுன் ஆங்கில மருத்துவங் கற்ற ஒருவர் இருந்தார். இவர் நற்குணமுள்ள ஓர் இந்து பிரபுவே. இவருடைய மகனார்க்கு உரிய காலத்தில் நற்குண நற்செய்கை வாய்ந்த ஒரு பெண் மனைவியானாள். ஆனால், இப்பிரபுவின் மனையாளும் மகளும் மிகவும் கொடுமையான வன்னெஞ்சம் உள்ளவர்கள். இவர்கள் தம் வீட்டுக்கு வந்த புதுப்பெண்ணைக் கண்டு மனம் மகிழாமல் மனம் மிகப் புழுங்கினார்கள். அப்பெண் வீட்டுக்கு வந்த நாள் முதற்கொண்டு மாமியும் நாத்துணாளும் சிறிதும் மனவிரக்கமின்றிக் கரும்பை ஆலையில் வைத்து நசுக்கிப் பிழிதல்போல அந்த நல்ல பெண்ணை வீட்டுவேலை முழுதுஞ் செய்யும்படி ஏவியதல்லாமலும் தீயசொற்களாலும் தம்கடுகிய முகத்தாலும் அடி உதைகளாலும் அளவுகடந்து வருத்தி வந்தார்கள். அந்தப் பெண்ணோ இவ்வளவு துன்பங்களையும் பொறுத்துக்கொண்டு தனக்கு நன்னாள் நன்னாள் வரும் வரும் வரும் என்று எதிர்பார்த்துச் சிலவாண்டுகள் கழித்தாள். தன் கணவன் தன் நிலைமையைத் தானாகவே தெரிந்துகொண்டு இத்துன்பம் அகலுதற்குரிய ஏற்பாடு செய்வான் செய்வான் என்று பலநாள் நம்பியிருந்தும், ஒன்றும் வழிபிறக்கவில்லை. அவள் தன் கணவனோடு தாராளமாய்க் கூடியிருக்கவும் அக்கொடியார் விடுவதில்லாமையால் அவள் தன் கணவனிடம் தானே தன் வாய்திறந்து தான் படுந் துன்பங்களைத் தெரிவிக்கவும் நெடுநாள்வரையில் அவளுக்குச் சமயம் வாய்த்திலது. பிறகு ஒருநாள் தெய்வச் செயலாய்த் தன் கணவனுடன் சிறிது தாராளமாயிருக்கச் சமயம் வந்தது. அப்போது அவள் தன் கணவனை மிக்க அன்புடன் பார்த்து, “என் ஆருயிர்க்காதலனே! யான் ஏதொரு குற்றமும் செய்யாதிருக்கவும், வீட்டுக்காரியங்கள், அவ்வளவும் யாரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/110&oldid=1623401" இலிருந்து மீள்விக்கப்பட்டது