பக்கம்:மறைமலையம் 3.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
78

❖ மறைமலையம் -3 ❖

செய்யாமல் யான் ஒருத்தியே முற்றுங்கவனித்து என்னால் இயன்றளவு மனவருத்தத்திற்கு இடனின்றிச் செய்து வரவும், மனத்திற் கள்ளமின்றி யான் எல்லாரிடத்தும் அன்பு பாராட்டி வரவும் என்னை அன்புடன் பாராமல் என் மாமியும் நாத்துணாளும் எனக்குச் செய்துவருங் கொடுமைகள் இவ் வளவென்று என்னாற் சொல்லமுடியாது. யான் என்ன செய்வேன்! என் பிரிய மணவாளரே! தாங்களே என் நிலைமையை அறிந்து என்னை இத்துன்பத்தினின்று அகற்றுவீர்கள் என்று எதிர்பார்த்தேன்; தாங்களும் கவனிக்கவில்லை. தங்களுடன் என் குறையையாவது எடுத்துச்சொல்ல நாம் இருவரும் தனியேயிருக்கச் சமயம் வாய்க்குமாவென்று எதிர்பார்த்தேன். நெடுநாளாக அதுவும் வாய்க்கவில்லை. இன்றைக்கு ஏதோ தெய்வகதியாய் தங்களைத் தனியே சந்திக்க நல்லவாய்ப்புப் பெற்றேன்” என்றனள். இவ்வரிய பெண்ணின் கணவனோ இயற்கையில் நுட்ப அறிவில்லாதவனாதலால், இவள் கூறிய இச்சொற்களைக் கேட்டும் அவற்றின் நுணுக்கத்தையும் தன் மனைவியின் அருமைக் குணத்தையுந் தெரிந்துகொள்ள மாட்டாதவனாய் அலட்சியமாக ‘மாமி மருமக்கள்மார்க்கு இது வழக்கந்தான். இவையெல்லாம் என் காதிற் போடாதே’ என்று சொல்லிப் போய்விட்டான். பிறகு அவள் தன் தலைவிதியை நொந்துகொண்டு, ஒரு நாள் மாமி நாத்துணாளைப் பார்த்து “நீங்கள் காலால் இட்ட வேலையை யான் தலையாற் செய்யக் காத்திருக்கிறேன். ஆனால், நீங்கள் மாத்திரம் பட்சமாய் மலர்ந்த முகத்தோடு என்னை நடத்திவந்தால் அதுவே எனக்குப் போதும்,” என்று கெஞ்சிக்கேட்டாள். இவ்வினிய சொற்கள் அக்கொடி யாரிருவருக்கும் இனிமையைத் தராமல் நாராசத்தைக் காய்ச்சிக் காதிற் செருகினது போல் இருந்தன. உடனே அவர்கள் இருவரும் விளக்குமாறும் தடியும் எடுத்துக் கொண்டு அமிர்தவல்லி போன்ற அப்பெண்ணை உடம்பெங்கும் நன்றாக நைய நறுக்கிப் புடைத்தார்கள். அப்பெண்ணோ பொறுக்கக் கூடாத அவ்வடிகளைப் பெற்றுக் கொண்டும் வாய் திறவாமலும் எழுந்திருக்கக் கூடாமலும் கிடந்தாள். அன்றிரவு வீட்டுக்கு வந்த அவள் கணவன் எப்போதும் போலத் தன் மனைவியைக் கவனியாமலே இருந்து விட்டான். அன்றிரவு அப்பெண்ணுக்கு உடம்பின் நோயும் மனநோயும் மிகுதிப்பட்டன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/111&oldid=1623402" இலிருந்து மீள்விக்கப்பட்டது