பக்கம்:மறைமலையம் 3.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
81

நினையாமலும் நாம் செய்தது தவறாயிற்றே என்று மனம் இரங்காமலும் கடினசித்தம் உடைவளாயிருந்தாள். நாளேற, நாளேற இத்துன்பங்களால் அந்நாத்துணாள் உடம்பு இளைத்து எலும்பு வெளித்தோன்றி ஊதினாற் பறக்கும் இயல்பு உடையவளானாள். இப்படி யெல்லாம் ஒருமாதம் கழிந்தது. ஒருநாளிரவு எல்லாம் ஓர் ஓசையும் இன்றி அமைதியாயிருந்தது. அவ்வீட்டிலுள்ள எல்லாரும் மிகவும் அயர்ந்து உறங்கினார்கள். கதிரவன் கீழ்த் திசையிற் றோன்றுஞ் சமயமாயிருந்தது. அப்போது, இறந்துபோன அப்பெண்ணின் கணவன் ஒரு கனவு கண்டான்; தன் மனைவி தன் பக்கத்தில் மிகவும் அமைதியோடு நின்றுகொண்டு தன்னுடன் பேசுவதாக நினைத்தான். முதலிற் சிலநேரம் அவள் பேசுவது இன்னதென்று தெரிந்துகொள்ளக் கூடவில்லை. அதன் பிறகு அவன் உற்றுக் கேட்கையில் “என் ஆருயிர்க் காதலனே! நான் உயிரோடு இருந்தபோது நான் உம்மை அணுக வொட்டாமல் பலவகையாலும் என்னை வருத்திவந்த உம் சகோதரி ஒழிந்தாள்; என் அன்புள்ள நாயகனே! நான் உமக்கு ஏதுந் தீங்குசெய்வேன் என்று எண்ணாதீர்கள். உம்மை என் கண்மணிபோற் பாதுகாத்து வருவேன்; நான் உயிரோடு இருக்கும்போது நீர் என்னிடம் அன்பு பாராட்டாவிடினும், இப்போதாயினும் என்னிடம் நீர் அன்பு பாராட்டி வருவீரானால் அஃதொன்றுமே எனக்குப் போதும்,” என்று பேசக் கேட்டான். அது கேட்டவன் திடுக்கிட்டு எழுந்தான். எழுந்து தன் சகோதரி படுத்திருந்த இடத்திற்கு ஓடினான். அங்கே அவளைக் காணவில்லை. இவன் செய்த அரவத்தால் வீட்டிலுள்ள எல்லாரும் விழித்துக் கொண்டார்கள். வீடெங்கும் அவளைத் தேடினார்கள்; எங்கும் காணவில்லை. பிறகு வீட்டிலுள்ள கிணற்றிற் போய்ப்பார்க்க அவள் அதிற் பிணமாய் மிதக்கக் கண்டார்கள்.

இங்ஙனம் இவள் இறந்தபிறகு இரண்டு வாரங்கள் வரையில் அவ்வீட்டில் எவ்வகையான கலவரமும் இல்லாதிருந்தது; எல்லாம் அமைதியாகவே யிருந்தது. தன் மகள் இறந்ததால் உண்டான வருத்தம் அவள் தாய்க்கும், தன் மனைவியையும் சகோதரியையும் இழந்ததால் உண்டான துயரம்.. அவ்வீட்டிற்குடையவரான வைத்திய பண்டிதருக்கும் அன்றி மற்றெல்லாம் அமைதியாகவே இருந்தன. தம் மரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/114&oldid=1623405" இலிருந்து மீள்விக்கப்பட்டது