பக்கம்:மறைமலையம் 3.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
82

❖ மறைமலையம் -3 ❖

மகளை இழந்ததுபற்றி இப்பண்டிதர் மனம் மிக வருந்தினாரே யல்லாமல் அவள் மாமி சிறிதும் வருந்தவில்லை. அவளோ தன் மகள் இறந்த வருத்தத்தை மிகவும் பாராட்டி வந்தாள். இங்ஙனம் ஒரு மாதஞ் சென்றது.

ஆனால், அம்மாமியாரின் அறிவு நாளுக்குநாள் ஒரு நிலைப்படாமல் வந்தது, சிறிது சிறிதாகத் தன் நினைவையும் இழந்து வந்தாள்; தான் இன்னாள் என்பதையுங் கூடச் சிற்சில சமயங்களில் மறந்துபோனாள். பைத்தியங் கொண்டவர்கட்கு உள்ள செய்கையெல்லாம் இவளிடத்துங் காணப்பட்டன. இதற்காக ஆங்கிலவைத்திய பண்டிதரான இவள் கணவனும் இவள் மகனும் இவளுக்கு வந்த இச்சித்தப் பிரமையை நீக்கச் செய்த முறைகளுக்கு ஓர் அளவே இல்லை. இப்படியெல்லாஞ் சில வாரங்கள் கழிந்தன. இஃதிப்படியிருக்க-

திடீரென்று ஒருநாள் விடியற்காலையில் நாகபட்டினத்தின் கடற்கரையருகிலே ஒரு பிணம் வந்து ஒதுங்கிக் கிடக்கிறதென்னும் ஒரு சொல் எங்கும் உலாவியது. ஊரவர்களிற் பலர் அங்கே அதனைப் பார்ப்பதற்குப் போய்க் கூடினர். ஊர்க்காவற் சேவகர்களும் ஆங்கில வைத்திய பண்டிதர்களும் அங்கே அதனைப் பரிசோதனை செய்தற்கென்று போய்ச் சேர்ந்தனர். இங்ஙனஞ் சேர்ந்து நின்றவர்களில் ஒருவருடைய பார்வை அப்பிணத்தின்மேல் விழுந்த மாத்திரத்திலே அவர் கண்களில் நீர் துளித்துளியாய் விழுந்தது; அவர் உடலம் பதறியது; வாய் குழறியது; தம்மை மறந்தோடி அப்பிணத்தின் மேல் விழுந்து அலறினார். அவர் யாரென்பீரேல், இச்சரித்திரத்தில் சம்பந்தப்பட்ட ஆங்கில வைத்திய பண்டிதரென்று தெரிமின்கள்; அப்பிணம் தன் மருமகளை வருத்தி மடிவித்த மாமியாரே யல்லது வேறன்று. அப்பிணத்தின் முடிமுதல் அடிகாறும் துணியினால் வரிந்து கட்டப்பட்டிருந்தது; நெற்றியில் தீட்டிய குங்குமஞ் சிறிது

கலைந்திருந்தது. இம் மாமி தன் வீட்டிலிருந்து நள்ளிரவிலே புறப்பட்டு எவ்வாறு வந்தாள். எப்படிக் கடலிலே வீழ்ந்தாள் என்பது யாருக்குமே தெரியாது. இவள் கணவனாரான ஆங்கில வைத்திய பண்டிதர் ஒவ்வொரு நாளும் விடியற்காலையில் வெளியே கடற்கரை வரையில் உலவப்போவது வழக்கம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/115&oldid=1623406" இலிருந்து மீள்விக்கப்பட்டது