பக்கம்:மறைமலையம் 3.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
83

அங்ஙனம் போகும் இவர் சடுதியிலே ஒரு பிணம் கடற்கரையில் வந்து ஒதுங்கிக் கிடக்கிற தென்னுஞ் சொல்லைக் கேட்டவுடன் அதனிடம் வந்து கடைசியாக அது தம் மனைவியாகவே இருக்கக் கண்டு மிகவுந் துன்புற்று நைந்தார்.

மாமியார் இறந்ததன் பிறகு, இவளையும் இவள் மகளையும் கொன்ற மருமகளின் ஆவேசம் அவ்வீட்டில் ஏதும் ஆரவாரஞ் செய்தலின்றி ஒழிந்தது. என்றாலும், இந்நிகழ்ச்சியின் பிறகு அவ்வீடு செழிக்கவில்லை. சில நாளில் அவ்வாங்கில வைத்திய பண்டிதரும் இறந்தார். அவ்வீட்டுக்கு உடையவரான அவர் மகனும் அதனைப் பிறர்க்கு விற்றுவிட்டு எங்கேயோ போய்விட்டார். இங்ஙனம் அந்தக் குடும்பமே பாழாய்ப் போய்விட்டது.

இவ்வரலாற்றினால் அறியக் கிடக்கும் உண்மை யாது? பிறரால் நீதியின்றி அளவுக்குமேல் துன்புறுத்தப்பட்டவர்கள் தாம் இறக்குங்காலத்துத் தமக்குத் தீங்கு செய்தவரிடம் பழிக்குப்பழி வாங்கவேண்டு மென்னும் எண்ணத்தோடும் உறுதிகொண்டு போவார்களானால், அவர்கள் இறந்தபிறகு சில நாட்களிலெல்லாம் தமது சூக்குமசரீரத்தில் அந்நினைவுகேற்ற வலிவு அடைந்து, தமக்குத் தீங்கிழைத்தவர்க்குப் பொறுக்கலாகாத பெருந்துன்பத்தை விளைக்கின்றார்கள் என்பதேயாம், இதனைப் போலவே நடந்த உண்மை வரலாறுகள் இன்னும் எத்தனையோ இருக்கின்றன; அவையெல்லாம் இங்கெடுத்துக் காட்டப் புகுந்தால் இஃது அளவின்றி விரிந்து போகும். இவ்வரலாறுகளின் காரணத்தை மாத்திரம் உற்று நோக்குவேமாயின், துன்புறுத்தப்பட்டவர்கள் இறக்கும் போது மாத்திரம் பழிவாங்க உறுதிகொண்டு விடுவராயின், தாம் இறந்த பிறகுந் தம்மெண்ணத்தைக் கட்டாயம் நிறைவேற்று விப்பரென்பது திண்ணமென்றல் செவ்வையாக விளங்குகின்றது. ஆகையால், தம் உயிரை விரும்புபவர்கள் பிறவுயிர்கட்குந் தீங்கு இயற்றாது இருக்கக்கடவராக. இதுபற்றியன்றோ இவ்வுண்மைகள் எல்லாம் முற்றவுணர்ந்த முதலாசிரியரான திருவள்ளுவ நாயனார், “பிறர்க்கின்னா முற்பகற் செய்யிற்ற மக்கின்னா பிற்பகற்றாமே வரும்” என்று அருளிச் செய்வாராயினர். முதற் பொழுதிற் பிறர்க்கு ஒருவன் ஒரு தீமையினைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/116&oldid=1623407" இலிருந்து மீள்விக்கப்பட்டது