பக்கம்:மறைமலையம் 3.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
87

என்னும் அரசரினும் நல்லவர் எனச் சொல்லப்படுதற்குரியார் உளரோ சொல்லுமின்! இத்தன்மையான மிக அரிய நற்குணத்திற் சிறந்த மெய்ப் பொருளார் தமது தூலசரீரத்தைவிட்டுச் சூக்குமசரீரத்திற் சென்றபிறகுந் தமது நற்குணத்திற் சிறிதும் பிறழமாட்டார்; ஆகையால், அவரைக் கொன்றவன் அவரால் சிறிதுந் துன்புறுத்தப்படுவான் அல்லன்.

அங்ஙனம் பழியே நினையாத நல்லவர்க்குத் தீங்கிழைப்போர் தண்டிக்கப்படாமல் தப்புவராயின், உலகத்தில் தீமைசெய்வோர் தொகை மிகுதிப்படுமேயெனின், எல்லா உயிர்க்கும் உயிர்க்குயிராயும் அறிவுக்கு அறிவாயும் நிறைந்து விளங்குகின்ற கடவுள் தீயவன் நெஞ்சிலும் மனச்சாட்சியாயிருந்து அவன் செய்த தீமைகளை அவனுக்கு எந்நேரமும் அறிவித்து, அவனுக்கு ஓயாத துன்பத்தை வருவித்து வருத்தித் திருத்துவராதலின் அவன் நாள் ஏற நாள் ஏற நல்லவனாய்த் திரும்புவன்; ஆதலால், தீயோர் தண்டிக்கப்படாமற் போதலும், அவர் தொகை பெருகுதலும் இல்லையென்க. மேலும், யாரும் அறியாமல் நல்லோர்க்குத் தீங்கு செய்தவன், அத்தீங்கினைப் பிறர் அறியாமல் மறைத்து வைக்குமளவும் அதனாற் பெருந் துன்பம் உழப்பனாதலால் தன் மனநோய் தாங்கமாட்டாமல் தானே தன்னுள் மறைத்துவைத்த தீய செய்கையைப் பிறர்க்கு வெளியிட்டுவிடுவான். அவனது தீய செய்கையை உணர்ந்த உலகத்தவர் அவனைப் பலவகையால் துன்புறுத்தி வருவராதலின் அவன் தன் ஆயுள் கால மெல்லாம் சொல்லுதற்கரிய பெருந் துன்பத்தையே அனுபவிப்பவன் ஆவன். அதுவல்லாமலும், இந்நிலத்தின்மேல் உள்ள நாளெல்லாம் துன்பமே உழந்தவனுக்கு அவன் இறக்குந் தறுவாயிலும் அத்துன்பவுணர்வே அவன் முன் வந்து நிற்கும்; அத்துன்ப நினைவோடு அவன் இத்தூலசரீரத்தை விட்டுச் சூக்குமசரீரத்திற் சன்ற மாத்திரத்திலே, அத்துன்பம் நூறுமடங்கு ஆயிரமடங்கு மிகுதியாய்ப் பெருகி அவனை நெருப்பிலிட்டு வாட்டுவதைப் போல் வருத்தும், அதுவன்றியும், நல்லவர்க்குத் தீங்கு செய்தும், செய்தும், இங்குள்ளவர் அதனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/120&oldid=1623805" இலிருந்து மீள்விக்கப்பட்டது