பக்கம்:மறைமலையம் 3.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

89



14. அறக்கடவுளின் ஒளியுடம்பு

இங்ஙனம் தீங்கு செய்தவரை நிரயத்திற் றள்ளித் துன்புறுத்தவும் நன்மை செய்தவரைத் துறக்கத்திற் செலுத்தி இன்புறுத்தவும் நியமிக்கப்பட்ட அறக்கடவுள் இருக்கும் உலகம் மிகவுஞ் சூக்குமமான ஆகாய அணுக்களால் ஆக்கப்பட்டு, இந் நிலவுலகம் போன்ற எண்ணிறந்த அண்டங்களைத் தன்னுள்ளடக்கி வியாபித்து நிற்பது. இவ்வாகாயம் நம்முலகத்தைக் கவிந்திருக்கும் பூதாகாயத்தினும் பன்மடங்கு நுண்ணியதாய் அதில் அரசு செலுத்தும் அறக்கடவுளின் சிந்தையோடு ஒன்றுபட்டு நிற்பதாகும். அவ்வறக் கடவுளின் உடம்பு நமதுடம்பு போற் பருப்பொருள்களால் ஆக்கப்பட்டதன்று; அது மிக நுண்ணிய பொருளாற் றேசோமயமாய் அமைந்து விளங்கும் ஒளியுடம்பேயாகும். அவருடம்போடும் சிந்தையோடும் ஒருங்கு இயைந்து அளவுபடாத பல அண்டங்களையும் வியாபித்த இவ்வொளி ஆகாய மெங்கும் அவ்வறக் கடவுளின் அறிவும் வியாபித்து உடன் நிற்கும்; இந்த நுண்ணிய ஒளி ஆகாயத்தில் நிகழும் நிகழ்ச்சிகள் அத்தனையும், இவ்வொளி யாகாயத்தினுட்பட்ட அண்டங்கள் பலவற்றின் நிகழும் நிகழ்ச்சிகள் அத்தனையும், அவ் வண்டங்களிற் பிறந்து இருந்து இறக்கும் எண்ணற்ற உயிர்களின் அறிவு நிகழ்ச்சிகள் அத்தனையும் அவ்வறக் கடவுளின் உள்ளத்திலே உடனே தோன்றாநிற்கும். பூதாகாயத்தினும் மேற்பட்டு, நமது மனத்தோடு ஒன்றுபட்டு நிறைந்த மானத ஆகாயத்தையும் அவ் வொளியாகாயம் ஊடுருவிக் கிடப்பதாகலின், நம் முள்ளத்திற் சடுதியிலே எழுந்து மறையும் சிற்றெண்ணங்கள் முதல் அங்கு நிலைபெற நிற்கும் வல்நினைவுகள் வரையில் எல்லாம் ஒரு சிறிதும் பிசகாமல் கல்மேற் செதுக்கப்பட்ட எழுத்துக்கள் போல அவ்வொளியா காயத்தின்கட் பதிக்கப்பட்டு அழிவின்றிக் கிடக்கும்; அவை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/122&oldid=1623808" இலிருந்து மீள்விக்கப்பட்டது