பக்கம்:மறைமலையம் 3.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
91

உள்மடங்கிச் சூக்கும வுடம்பின் வழியே நடைபெறுகின்றிலது; நடைபெறாதாகவே, அச் சூக்குமவுடம்பின் மாத்திரம் புலப்படுவதான தெளிவுக்காட்சியும் நமக்கில்லையாய்ப் போகின்றது. மற்றுத் தென்றிசைக்கண்ணே சூக்கும உலகத்தில் உள்ள அறக்கடவுளுக்கோ தேசோமயமான சூக்கும வுடம்பேயன்றி, வினைவயப்பட்ட இப் புழுத்த புலையுடம்பு இல்லாமையாலே, அவருக்கு அச் சூக்கும வுடம்பின் வழியே நடைபெறும் தெளிவுக் காட்சி அண்டங்கள் பலவற்றையும் ஊடுருவி நிறைந்து நிற்கும் ஒளியாகாய மெங்கும் இயைபுபட்டு நிற்றலால், அவ் வாகாயத்தில் சூக்குமமாய்ப் படிந்துகிடக்கும் உயிர்களின் எல்லா நினைவுகளும் எல்லாச் செய்கைகளும் அதன்கண் என்றும் விளக்கமாகத் தோன்றியபடியே நிலைபெற்றிருக்கும். இவ்வாறு எல்லா நிகழ்ச்சிகளையுந் தன்னுள் அடக்கி வைத்திருக்கும் இவ் வொளியாகாயத்தையே புராண கதைகள் உருவகப்படுத்திச் சித்திரகுத்தன் கணக்குப் புத்தகம் என்று கூறுகின்றன; அவ் வாகாயத்திற் சூக்கும வுருவாய் நின்று எல்லாவற்றையும் அறியும் தெளிவுக் காட்சியையே சித்திரகுத்தன் என்றும், அக் காட்சியையுடைய அறக் கடவுளையே அச் சித்திரகுத்தனுக்கு எசமானனான இயமன் என்றும் பழைய அக் கதை நூல்கள் அவற்றை வேறு வகையால் வைத்துரைத்தன. ஆகவே, மறைவிற் செய்தனவும் மறைவின்றிச் செய்தனவும் அகத்தே நினைந்தனவும் புறத்தே நடந்தனவுமாகிய எல்லாம் ஒரு கடுகளவும் மாறாமல் குறையாமல் இவ் வொளி யாகாயத்தில் தீட்டப்பட்டுக் கிடக்குமென்பது உள்ளங்கை நெல்லிக் கனிபோல் தெளிவாகப் புலப்படுதலால், யார்க்குந் தெரியாமல் இன்ன தீமையை இன்னவர்க்குச் செய்து விட்டோம் என்று மனப்பால் குடித்து மகிழ்வார் மகிழ்ச்சி வெறும் பொய்மகிழ்ச்சியேயாம்.

வஇவர் ஒரு தீய செயலைச் செய்தற்கு நினைத்த மாத்திரத்தாலே அந்நினைவு அறக்கடவுளின் திருவுளத்திற் றோன்ற, அவர் இவ்வேழையுயிரின் பேதைமைச் செயலைக் கண்டு பெரிதும் இரங்குவர். எனவே, நல்லவர் ஒருவருக்கு மறைவிலே தீங்குசெய்து, அவர் அதனைப் பாராட்டாமல் விடுதலின் அவராலும் மறைவிற் செய்த அதனை உலகத்தவர் அறியாமலி ருத்தலின் உலகத்தவராலும் ஒறுக்கப்படாமல் தப்பினவன் தன்செயல் எல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/124&oldid=1623811" இலிருந்து மீள்விக்கப்பட்டது