பக்கம்:மறைமலையம் 3.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
94

❖ மறைமலையம் - 3 ❖

உண்டென்பதும், அதன்கண் எல்லா நிகழ்ச்சிகளும் அழிவின்றிப் பதிக்கப்பட்டு நிலைபெறுமென்பதும், அந்நிகழ்ச்சி களெல்லாம் தெளிவுக் காட்சியுடையார்க்கு இனிது புலப்பட்டுத் தோன்று மென்பதும் நன்கு பெறப்படுகின்றன வல்லவோ? அது நிற்க.

ஒளியாகாயம் ஒன்றுண்டென்பது உண்மையே யாயினும், பருப்பொருள்களைப் போல் உருவம் இல்லாத எண்ணங்களும் செயல்களும் ஆகிய நுண்பொருள்களுக்கு உருவம் உண்டென்றாலும், அவை அவ் வொளியாகாயத்தில் பதிக்கப்பட்டு நிலைபெறுமென்றாலும் எங்ஙனம் பொருந்துமெனின்; நம்முடைய கட்புலனுக்குத் தோன்றும் பருப்பொருள்களுக்கு மாத்திரமே உருவமுண்டென்றும், அதனுக்குப் புலப்படாத நுண்பொருள்களுக்கு உருவம் இல்லையென்றும் கூறுதல் நுண் பொருளாராய்ச்சி யில்லார் கூற்றாம். நமது செவிப் புலனாற் கவரப்படும் பலவகை யொலிகளும் கட்புலனுக்குத் தோன்றா தனவாயினும், அவை தமக்கும் உருவம் உண்டென்று அமெரிக்காவிற் பிரபல பௌதிக சாத்திர பண்டிதரான எடிசன் என்பவர் ஐயமின்றி நாட்டியிருக்கின்றனர். அவராற் செய்து காட்டப் பட்டிருக்கின்ற ஒலியெழுதி*(phonograph) என்னுங் கருவி இவ்வுலகமெங்கு முள்ள நாடு நகரங்களெல்லாம் பரவி இவ்வுண்மையை அறிவில்லாரும் அறியும்படி இனிது விளக்கிக் காட்டுகின்ற தன்றோ? அவ் வொலிஎழுதி யென்னுங் கருவியின் எதிரே ஒருவரிருந்து ஒரு பாட்டு பாடினால், அப்பாட்டின் ஒலிகள் அக் கருவியில் அமைந்த தட்டிலே வரிவரிகளாகப் பதிந்து விடுகின்றன; அங்ஙனம் அவை பதியப்பெற்ற தட்டை மறுபடியும் அக் கருவியில் வைத்து இயக்கினால் அவர் பாடிய படியே எள்ளளவும் பிசகாமல் கேட்பவரெல்லாம் வியக்கும்படி பாடுகின்றது.

இன்னும் உலகம் எங்கணும் புகழ்பெற்ற பௌதிக சாத்திர பண்டிதராய்ப் பிராஞ்சு தேயத்தின்கண் இருக்கும் பாரடக்* (Dr. Baraduc) என்னும் அறிஞர் கட்புலனாகாத மக்களும் பிறவுயிர்களும் நினைக்கும் நினைவுகளையும் எண்ணங்களையும் விருப்பங்களையும் கட்புலனாகும்படி வைத்துப் படம்பிடிக்கக் கூடு மென்று முடிவாகக் காட்டியிருக்கின்றார். இத்தகைய ஒளியா காய ஆராய்ச்சியில் மிகவுந் தேர்ச்சியடைந்தவரான ஒருவர் பாரடக் பண்டிதரைப் பார்க்கச் சென்ற போது, அவர் மக்கள் மன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/127&oldid=1623816" இலிருந்து மீள்விக்கப்பட்டது