பக்கம்:மறைமலையம் 3.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
97

உருவ வொற்றுமையினைக் கண்டு மிகவும் வியப்படைந்தார்; அந்தப் படமோ வழக்கமான முறைகளால் எடுக்கப்படும் மற்றை நிழற்படங்களைவிட, அவர் முகத்தின் அச்சு அடையாளங்களையும் ஏனைச் சிறப்புக் குறிகளையும் தெளிவுறக் காட்டியது”. இங்ஙனம் பிராஞ்சு தேசத்தில் புகழ்பெற்ற பண்டிதராய் விளங்கும் பாரடக் அவர்களால் உறுதிப்படுத்தப் பட்டிருக்கும் உண்மைகளை உற்று நோக்கும் எவர்தாம் அறிவுக்கும் உருவம் உண்டென்பதை உணராமற்போவர்?

இன்னும் இச் சூக்கும ஒளியாகாயத்தின் இயல்புகளை இனிது ஆராய்ந்து அவற்றைத் தமது அனுபவத்திற் கொண்டு வந்திருக்கும் ஜே. மாக்லௌட் கிரேக் என்னும் அமெரிக்க வித்துவான், இவ்வொளி யாகாயத்தின் றன்மையை விரித்துரைத்த உபந்நியாசம் மிகவும் பயன்படுவதாகலின், அதனை இங்கே தமிழில் மொழிபெயர்த்துத் தருகின்றாம்.

“சூக்கும ஒளியாகாயத்தில் தன்னைத் தோற்றுவிக்க விரும்பும் மாணவன் உள்ளத்தை ஒருமுகப் படுத்துதலே அதற்குத் திறவுகோலாமென்று அறிந்துகொள்வன். நாம் நமதுடம்பை விட்டுச் சிறிதுநேரம் பிரிந்துபோய், வேறோர் ஆகாயத்தில் முழுதுணர்வோடு தோன்ற விரும்புவோமாயின், நாம் நம்மையே நன்கு வசப்படுத்திக் கொள்ள வேண்டுவது இன்றியமை யாததாகும்.”

“சூக்கும ஒளியாகாயத்தில் யான் முதன்முதற் றோன்றிய அனுபவம் எட்டொன்பது வருடங்களுக்கு முன் சிட்நி என்னும் ஊரில் நிகழ்ந்தது.”

“யான் எனதுடம்பைவிட்டுப் போவதுபோல் உணரலானேன்; என்றாலும், யான் அதனோடு ஒட்டிக் கொண்டிருப்பது போலவே அவ்வுணர்விற்றென்பட்டது. அதன் பிறகு ஓர் இமை கொட்டுவதற்குள் யான் இரண்டிடத்தில் இருக்கக் கண்டேன். ஒரு நாற்காலியின்மேல் உட்கார்ந்திருந்த என்சொந்த ஊனுடம்பினோடு சேர்ந்தாற்போல் யான் மற்றொரு நாற்காலியின் மேல் உட்கார்ந்திருந்தேன். ஒரு நொடிப்பொழுது யான் வெருட்சி அடைந்தேன்; எப்படியோ அஃது என்னைத் திடுக்கிடப் பண்ணியது; அதன்பின்னர் யான் எனதுடம்பினுள் திரும்புவது போற் றோன்றியது.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/130&oldid=1623822" இலிருந்து மீள்விக்கப்பட்டது