பக்கம்:மறைமலையம் 3.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
98

❖ மறைமலையம் - 3 ❖

“இத்தகைய தோற்றத்தில் எனக்கு விருப்பம் உண்டாகவே இதனை ஆராய்ந்து அறிதற்குத் தலைப்பட்டேன். உணர்வோடு கூடிய எனது அடுத்த அனுபவம் இந்த நகரத்தில் யான் பரவசப்பட்ட நிலையிற் பிரசங்கம் புரியுங் காலத்தில் தோன்றுவதாயிற்று. யான் ஆகாயத்தில் மிதந்து செல்வதாக உணரலானேன்; யான் நெடுந்தூரம் பிரயாணஞ் செய்வதுபோற் காணப்பட்டது. ஒரு மணி நேரம் ஓர் உபந்நியாசம் செய்தபிறகு யான் திரும்பவும் உணர்வுபெற்று விழித்து அக்கிராசனரை நோக்கி, ‘யான் நியூஸீலண்டில் உள்ள க்ரைஸ்ட் சர்ச் என்னும் இடத்திற்குக் போயிருந்தேன்” என்று கூறினேன். அதற்கு அவர் புன்சிரிப்புக்கொண்டு ‘அங்கே எவரைப் பார்த்தீர்கள்?’ என்று கேட்டார்.

“யான் ஒருவரைப் பார்த்தேன்; ஆனால் அவர் மேடை மேல் இல்லை. மற்று அக்கிராசனரா யிருக்கக் கண்டேன்” என்று விடைபகர்ந்தேன்.

யான் சொல்வது புதுமையாகக் காணப்படினும், முன் சொல்லியது நிகழ்ந்த இரண்டு வாரத்திற்குள் க்ரைஸ்ட் சர்ச் என்னும் இடத்திலிருந்து எனக்கு இரண்டு செய்திகள் வந்தன; முற்கூறிய அதே நாளின் மாலைக்காலத்தில் தெளிவுக் காட்சியுடைய மூவர் யான் அங்கே தேவாலய மேடைமேல் நிற்கக் கண்டனராம்.

“அச்சமயத்தில் உள்ளபடியே யான் எனதுடம்பை விட்டுப் போயிருக்க வேண்டுமென உணர்ந்தேன். சூக்கும சரீரத்தில் நிற்கும் ஆவேசம் ஒன்று எனதுடம்பைக் கைப்பற்றி அதன் வாயிலாகத் தான் பேசுவதற்கு அதனை உபயோகப் படுத்து கையில், யான் எனதுடம்பின் பக்கத்தே முன்னே பல தடவைகளில் நிற்கக் கண்டேன். ஆனதனால், யான் க்ரைஸ்ட் சர்ச் என்னும் இடத்திற்குச் சென்று நினைவோடு திரும்பி வந்ததைப் பற்றி வியப்படையவில்லை. ஆனால், அதே சமயத்தில் யான் அவர்களால் தெரிந்துகொள்ளப் பட்டதுபற்றி மிகவுங் களி கூர்ந்தேன்; என்னை அங்ஙனம் கண்ட பெருமாட்டிகளில் இருவர் மனோதத்துவ நூலாராய்ச்சிக்கு அமைந்த எனது மாணவர் குழாத்திற் சேர்ந்து தமது மனோசக்தியை மிகுதிப் படுத்திக் காண்டார்களாகையால் எனது மகிழ்ச்சி பின்னும் மேற்படுவதாயிற்று.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/131&oldid=1623823" இலிருந்து மீள்விக்கப்பட்டது