பக்கம்:மறைமலையம் 3.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
99


“இன்னும் இதனை ஆராய்ந்து செல்லவே, உடம்பை விட்டு எளிதாகவும், விரும்பியபடியும் செல்லுவதற்குக் குறிப்பான பழக்கம் அவசியம் வேண்டுமென்பது கண்டேன். ஒருமுறை, க்ரைஸ்ட் சர்ச் என்னும் இடத்தில் யான் பரவசப் பட்டநிலையிற் பேசிக்கொண்டிருந்த பொழுது, என்னுடம்பை விட்டு உவெல்லிங்டன் என்னும் ஊருக்குப் போய், நியூஸீலண்டிற்குத் திரும்பி வந்து கொண்டிருந்த என் மனைவியையும் குழந்தையையும் சூக்கும ஒளியாகாயத்திற் சந்திக்கக்கூடுமா என்று பார்க்க விரும்பினேன்.

“அந்த இரவு படுக்கைக்குப் போனவுடனே, மனவொருமை யினாலும் மந்திர மொழியினாலும் எனதுணர்வைச் சூக்கும நிலையிற்கொண்டு சென்று, ஒருவகையான அறிதுயிலில் அமர்ந்தேன்; அதன்பின்னர், எனதுடம்பை விட்டு உவெல்லிங்டனுக்குச் செல்வதாகத் தெளிய நினைவு கூர்ந்தேன். அப்பால் யான் படகினுள்ளே சிற்றறையில் இறங்கி என் மனைவியையும் மகவையுங் கண்டேன்; இது மாத்திரம் அன்று; அக்காட்சியிற் சிறந்த என் சிறு பையன் தன் தாயை நோக்கி, ‘அதோ அப்பா வந்திருக்கிறார்’ என்று சொன்னான்; என் மனைவியும் யான் தன்னுடன் மெய்யாக இருப்பதாகவே உறுதியாக உணர்ந்தாள்.”

“மறுநாட்காலையில், இலிட்டில்டன் என்னும் இடத்திற்குப் படகு வந்தவுடனே சென்று என்மனைவியிடத்தில் இரண்டொரு சொற் சொல்லியபிறகு ‘இங்கேயே இரு, நான் கீழே போய் நீ இருந்த அறை இதுதான் என்று தெரிந்து நீ கொள்ளுகிறேனா என்று பார்,’ எனக் கூறினேன். அதன்பிறகு யான் நேரே ஓர் அறைக்குச் சென்று, கண்காணிச்சியைப் பார்த்து, ‘கிரேக் என்பவர் மனைவி இருந்த அறை இதுதானா?’ என்று வினாவ, அவளும் ‘ஆம்’ என விடை பகர்ந்தாள்.”

“இதற்கு முன்னாள் இரவில் அவர்களின் திட்டமான நிலைமையையும், அவர்கள் எங்ஙனம் படுத்திருந்தார்களென்பதையும், அவர்கள் இருந்த அறையின் இடத்தையும் மாறாமல் நினைவுகூர்ந்தே னாதலால், மறுநாட் காலையில் அதனை உடனே குறிப்பிட வல்லவனானேன்.”

“இங்ஙனம் இதிற் சித்திபெறவே, இனிச் சமயம் வாய்க்கும்போதெல்லாம் இன்னும் இதனை ஆராய்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/132&oldid=1623824" இலிருந்து மீள்விக்கப்பட்டது