பக்கம்:மறைமலையம் 3.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
101

வீட்டுக்குப் போனபோது, உயிர்ப்பான உண்மைத் தோற்றத்தைப்போல், அந் நிகழ்ச்சி முழுதும் என்னெதிரே காணப்படலாயிற்று. கவர்ச்சி மிக்க ஆடவர் நால்வர் என்னைச் சூழ்ந்திருந்ததும், அவர்கள் என்னிடம் ஓர் ஆவேசத்தைக் கொண்டுவந்ததும், போர் நிகழுங் களத்திற்கு யான் அவர் களோடு கூடிச்சென்றதும், அங்கு யான் அமைந்த அனுபவத்தால் போரின் திகிலான நிகழ்ச்சிகளை என்றும் மறவாதபடி யான் உணரலானதும் மிகவுந்தெளிவாக நினைவுகூர்ந்தேன். மிகவும் அச்சந் தருவதான அவ்வனுபவத்தில் ஆடவரும் பெண்டிர் சிலரும் அப்போது தாம் தமதுடம்பைவிட்டுப் பிரிந்து போயும், அவர்கள் அதனை அறியாமல் தாம் தனதுடம்பிலிருப்பதாகவே நினைந்து ஒளியாகாயத்திலும் தொடர்ந்து போர் நிகழ்த்துதலைக் கண்டு, அவர்களிற் பெரும்பாலார் தமது தூலசரீரத்தை விட்டு வந்த உண்மை சிறிதும் தெரிந்திலரென மெய்ப்பட அறிந்தேன். போரினாலும் போரின் கொடுமைகளினாலும் விளையும் பயன் இன்னது தான் என்று முன்னிலையிலும் இப்போது நன்கு தெளியப் பெற்றேன். இந்தக் கொடுமைகள் எல்லாவற்றின் இடையில் ஓர் அழகிய தோற்றத்தைக் கண்டு நினைவு கூர்ந்தேன்; பெண்கள் கூட்டம் ஒன்று, போராடி அலமரும் இவ் வேழை உயிர்களுக்கு அவை தமது நிலவுடம்பை விட்டு வந்ததனை அறிவுறுத்தி உதவ உழைப்பெடுத்தலைக் கண்டேன்; அவர்கள் அணிந்திருந்த தூய வெள்ளிய ஆடைகளினாலும் அவர்களைச் சூழ்ந்திருந்த ஒளிவட்டத்தினாலும் அவர்கள் சூக்கும மேலுலகங்களிலிருந்து வந்த தேவதூதர்களே யென்று யான் சொல்லமாட்டுவேன்.”

“போர் செய்யச் செல்லும் படைவீரர்களை மகிழ்வுறுத்தி ஒருவரை ஒருவர் கொலைபுரியும்படி ஏவும் மனிதன், சூக்கும ஒளியாகாயத்தில் யான் கண்ட அனுபவத்தைத் தானும் காண்பனாயின், அவன் அங்ஙனங் கூவுதலை விடுத்து இணக்கம் உறுவிக்கும் சபைகளிற் சேர்ந்துழைக்க முந்துவன்.”

“ஆன்மதத்துவப் பொருள்களை இங்ஙனம் யான் தொடர்ந்து ஆராய்ந்து செல்கையில் ஒருமுறை யான் சிட்நி என்னும் இவ்வூரில் ஒரு புதுமையான அனுபவத்தைக் கண்டேன். மாதர் ஒருவர் மிகவும் இடர் உற்றவராய்ப் பேய்குடி கொண்ட வீட்டைப்பற்றி எனக்கு ஏதேனுந் தெரியுமாவென்று என்னைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/134&oldid=1623826" இலிருந்து மீள்விக்கப்பட்டது