பக்கம்:மறைமலையம் 3.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
102

❖ மறைமலையம் - 3 ❖

கேட்டார். அதற்கு யான் ஏதும் தெரியாதென்றும், ஆனால், அத்தகைய தொன்றை நெடுங்காலமாகத் தேடிக் கொண்டிருக்கின்றே னென்றும், அதனை யான் பார்க்க வேண்டுமென்றும் மொழிந்தேன். அதன்மேல் அவர் தம் வீட்டில் ஒரு சிறு மந்திரக் கூட்டமிட்டுப் பார்க்கும்படி என்னை வேண்டிக் கொண்டனர். நிலத்திற் காணப்படாத வியப்பான கூக்குரல் ஒலிகள் தோன்றுவதனாலும், கதவுகள் திடீரென்று திறப்பதனாலும், மேசைகள் தங் கால்கள் மேல் விறுவிறென்று சுழல்வதனாலும், சாளரக் கதவுகள் சடசடவென்று ஓசையிடுவதனாலும் தாம் மிகவுந் துன்புறுத்தப்படுவதாகக் கூறித் தமது வீடு ஆவேச வடிவங்களாற் சூழப்பட்டிருப்பதாகத் தோன்றுகின்ற தெனவும் மொழிந்தார்.”

“யான் இன்னுஞ் சிலரோடு அம் மாதரார் வீட்டுக்குச் சென்று, அங்கே மந்திரச் சிறு கூட்டமொன்று கூடினோம். அங்ஙனம் நாங்கள் உட்கார்ந்த மாத்திரத்தில் ஏதோ ஒரு வகையான தோற்றம் என் தலைமேல் வர உணர்ந்தேன். யான் தெரிந்து கொண்டபடி சூக்கும ஆவேசம் ஒன்று உடனே என்தலையின் பின்புறத்தை நெருக்கிப் பிடிக்கத் தொடங்கியது. என் தலையானது என் தோள்களிலிருந்து முறுக்கி யெடுக்கப்படுவதுபோல் உணர்ந்தேன். என்னுடைய அனுபவங்களில் இம்முறை தான், யான் என்வலி கொண்ட மட்டும் தடுத்துங் கூடாமல் யான் இருந்த நாற்காலியி னின்றுங் கீழே இழுத்துப் போடப்பட்டேன். எழுந்து மறுபடியும் நாற்காலியில் உட்கார்ந்த பிறகு. என் தலையின் உச்சி வழியே யான் வெளிப் புறப்பட்டுப் போவதுபோல் உணர்ந்தேன்; பின்னுஞ் சிறிது நேரத்திற் கெல்லாம் அவசமானேன். அதன்பின் என்னுடம்பை ஆவேசம் ஒன்று பற்றிக்கொண்டு தான் ஒரு கப்பற்காரனாக இருந்தனன் என்றும், கழுத்து முறிபட்டு அவச் சாக்காடு எய்தினன் என்றும், ஸ்காட்லாண்டு தேசத்திலுள்ள தன் மகள் ஒருத்திக்குச் செய்தி அறிவிக்க விரும்புகின்றனன் என்றும் மந்திரக்கூட்டத்தில் உள்ளார்க்குக் கூறினது. அவன் ஒருகாலத்தில் இவ் வீட்டில் தங்கியிருந்தனனாம்; அதனால், அவன் இங்கே திரும்பிவந்து இங்குள்ளவர் தன் புதல்விக்குச் செய்தி அறிவிக்கும்படி செய்ய நினைத்தனனாம். அதன்மேல் அம் மந்திரக்கூட்டத்தை நடத்துந் தலைமகன் ‘ஆம், உமது இருப்பை இங்குள்ளவர்க்குத் தெரிவிக்க வழக்கமல்லாத இம் முறையை நீர் கையாண்டதேன்? நீர் இவர்களை அச்சுறுத்தியது மாத்திரம் அன்று; அவர்கள் இவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/135&oldid=1623827" இலிருந்து மீள்விக்கப்பட்டது