பக்கம்:மறைமலையம் 3.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
105

விருந்திற்கு அழைத்துச் சென்ற நங்கைக்கு இத்தோற்றத்தைக் குறித்துச் சொன்னபோது, அவ்வம்மை ‘இஃது அப்படியிருந்தால், யானும் உம்முடன் வருவது நல்லது’ என்று கூறினார். உடனே நாங்கள் வீட்டுக்கு விரைந்து சென்றோம்; சென்றதும் யான் மெத்தைமேற் பாய்ந்தேறி, என் அன்னையார் அறைக்குட்சென்று, அவர் நிலத்தின் மேற் படுத்துக்கிடக்கக் கண்டேன். அன்னையார் மூச்சுப் பிடிப்பு நோயாற் பற்றப்பட்டுக் கிட்டத்தட்ட இறந்தவர் போலிருந்தார். யான் உடனே ஒரு வைத்தியரை அழைத்துவர, அவர் ‘உம்முடைய தாயார் நோய்கொண்டிருப்பதாக நீர் எங்ஙனம் அறிந்தீர்?’ என்று என்னை வினவினார். நடன சாலையில் இருந்தபோது இச் செய்தி மிகவுந் திண்ணமாகத் தோன்றியதனால் வீட்டுக்குப் போய் அங்கு ஏதேனும் உண்டா என்று பார்க்கத் தீர்மானித்தே னென்றும் அவருக்கு எடுத்துரைத்தேன். அதன்மேல் அவர் யான் நல்லநேரத்தில் வந்தேனென்று மறுமொழி புகன்றார்: யான் அங்ஙனஞ் செய்ததுபோல உடனே திரும்பி வந்திலேனாயின், என் அன்னையார் மூச்சு அடைபட்டுப் போயிருப்ப ரென்பது திண்ணமேயாம்.”

“நாம் நமது ஆன்மசக்தியை வெளிப்படுத்தும் போது இந்தப் பருவுடம்பை விட்டுப்போவது எளிதிலே கூடுவதாகும்; முதன் முதல் அவ்வுணர்ச்சி புதுமையுள்ளதாய்த் தோன்றும்; நீங்கள் உங்கள் உடம்பைவிட்டுத் தனித்து நிற்பது போலவும், உங்களையும் உங்கள் பருவுடம்பையும் இயைப்பதற்கு மெல்லிய ஒரு பிராணச் சரடு மாத்திரம் உள்ளது போலவும் உணருகையில் அது சிறிது புதுமையுள்ள தாகவே தான் இருக்கும்; ஆனால், அடுத்தடுத்துப் பழகிய பிறகு சூக்கும ஒளியாகாயத்தை உங்களுக்குச் சொந்த இடமாகவே நினைக்க நேரும்; அவ் வுணர்வாகாயத்திற் சுற்றிலுமுள்ள பொருள்களோடு தன்னுணர்வுடன் பொருந்தப் பெற்றதற்கு மகிழ்ச்சி அடைவது மாத்திரமன்று, அங்கே நீங்கள் ஞானத்தையும் அடைகிறீர்கள். உறங்குங் காலங்களில் தம்மை ஆன்மசக்தி உடையவர்களென்று தெரிந்து கொண்டோர் மாத்திரமன்று, மற்றும் பலரும் தமதுடம்பை விட்டுச் செல்கின்றனர் என்றும், நாம் காணும் கிளர்ச்சியுள்ள கனவுகள் பலவும் வெளிப் பார்வைக்கு நம்முடம்பு தூக்கத்திலிருப்பதுபோற் றோன்ற நாம் நம்முடம்புகளை விட்டுப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/138&oldid=1623830" இலிருந்து மீள்விக்கப்பட்டது