பக்கம்:மறைமலையம் 3.pdf/142

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
109

யான் எனதுடம்பைவிட்டுப் புறப்பட்டேன்; இந் நிலவுலகத்தில் எனக்குள்ள நேசரைப்போலவே ஒளியா காயத்திலும் எனக்கு நண்பராயுள்ள தேவதூதன் ஒருவரோடும் யான் அறிவொளி பெறாத உயிர்கள் உள்ள இடத்திற்குப் போக நினைத்தேன். அங்குள்ள ஆடவர் மானத ஆகாயத்தின் இருளில் தடவிக்கொண்டு போதலைப் பார்த்தேன். அவர்களிற் பலர் தாம் நிலவுடம்பைவிட்டு வந்ததாகவே தெரிந்து கொள்ள வில்லை; அதனைத் தெரிந்து கொண்டவர்களுங் கூட அறிவு வளரப் பெறாதவர்களாயும் வளராத நிலையிலுள்ளவர்களாயும் இருந்தனர்; ஆவிவடிவில் நின்ற இவ்வுயிர்கள் பலவற்றைச் சூழ உள்ள பொருள்களின் நிலைமைகளைப் பார்த்து, நுண்ணுடம்பில் நிற்கும் ஒரு கெட்டமனிதன், ஓர் அறிவில்லாதவன், நிலவுடம்பில் நிற்கும் ஒருவனைக் காட்டிலும் மிகவும் கெட்டவனாவன் என்னும் உண்மை முற்றும் உணரப்பெற்றேன்; இவ்விஷயத்தைக் குறித்து பேசும் இவ்விடத்தே இவ்விடத்தே மரண தண்டனையின் கொடுமையைப்பற்றி வற்புறுத்திச் சொல்ல விரும்புகின்றேன்.

யான் ஆன்மதத்துவ உணர்ச்சி யுடையவனா யிருத்தலால், நமதரசியல் விதிப்படி கொலை புரியப்பட்டுத் தமதுடம்பைப் பிரிந்து போன ஆடவர் பலரை யான் சந்தித்ததிலிருந்து, அவர்கள் தமது உடம்பைவிட்டுப் போனதும் தொலைவிலுள்ள ஏதேனு மோர் அழகிய உலகத்திற்குச் செல்லாமல் இந்த நில உலகத்தையே சுற்றிக்கொண்டு துன்பத்தினாலும் பிழைபட நடந்ததனால் உண்டான மனக் கலக்கத்தினாலும் பற்றப்பட்டு மானத இருளில் தாம் இருக்கக் கண்டனரென்பதை யான் தெரிந்துகொண்டேன்; அவர்களிற் பலர் பழிவாங்கும் எண்ணம் உடையோராய் மெல்லிய இயற்கை யுடையவரைப் பிடித்துக் கொண்டு அவர்களைப் பிசகி நடக்கும்படி ஏவுகின்றனர்.

இஃதுண்மையென்று நான் அறிவேன்; ஆனதனால் யான் பின்வாங்காமற் சொல்வது இது: உடம்போடிருக்கும் மனவலியில்லாத ஆடவரையும் பெண்டிரையும் தமக்கு இரையாக்கிக் கொண்டு அவர்களைப் பழிச்செயலுக்குத் தூண்டும்படி, கொலையாளிகளைக் கொன்று சூக்கும உலகத்திற்கு அனுப்புதலைப் பார்க்கிலும் அவர்கள் இந்த நிலவுலகத்திலேயே தாராளமாய்த் திரியும்படி விட்டுவிடுதல் நல்லது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/142&oldid=1623834" இலிருந்து மீள்விக்கப்பட்டது