பக்கம்:மறைமலையம் 3.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112



16. ஒளியாகாய உலகங்கள்

இந்நிலவுலகத்துப் பருப்பொருள்கள் உண்மையாக இருத்தல் போலவே ஒளியுலகங்களின் பொருள்களும் அழியா விழுப்பம் உடையனவா யிருக்கின்றன. அவ் வுண்மை யுலகங்களிலேதான் உங்களுக்கு என்றுமுள்ள குறைவுகள் நிறைவு செய்யப்படும். தமது நறுமணத்தை எங்கும் நிரம்பச் செய்யும் கொழுவிய மலர்களும் செடிகளும் சூழ்ந்த அழகிய மாளிகைகளால் அலங்கரிக்கப் பட்டுள்ள இனிய நிலத் தோற்றங்கள் கண்ணைக் கவரத் தக்கனவாயிருக்கின்றன. பொன் மயமான ஞாயிற்றின் ஒளியில் குவடுகளும் பக்கங்களும் முழுகப்பெற்ற மலைகளும் அங்குள்ளன. வெண்மையான அருவிகள் ஓடப்பெற்றனவும் வளஞ்சிறந்த பசும்புல் நிலங்களால் உடுக்கப்பட்டனவுமாகிய பள்ளத்தாக்குகளும் அங்குள்ளன. தமக்கு மேல் உள்ள தெளிந்த வானத்தைத் தம்மிடத்தே காட்டும் மேற்பரப்பும், புற்களும் மலர்களும் நிறைந்த கரை ஓரங்களும் எல்லையற்ற அன்பின் உணர்ச்சியை இனிதாக முணுமுணுத் தோடும் தெளிபளிங்கன்ன தண்ணீரும் பொருந்தப் பெற்ற யாறுகளும் அங்கு விளங்கா நிற்கும். பரிமளமான இளங்காற்றுக் கன்னத்தின்மேல் வீசுவதும் உள்ளிழுக்குந் தூயகாற்றும் ஆன்மாவைப் பரவசப்படுத்துகின்றன. மேலான நீலநிறம் வாய்ந்த வானமும் அங்கு நிலவும்: கீழுலகத்துள்ள நல்லவர்க்குக் கனிந்த செழுங்கதிரைச் சொரியும் ஞாயிற்றின் பல திறப்பட்ட வண்ணங்களோடு கூடிய பளப்பளப்பான கதிர்கள் தோய்ந்து கிளரொளிமிக்கு விளங்கும் முகிற் குழாங்கள் கற்றைக்கற்றையாக அவ்வானிலே மிதந்து செல்லா நிற்கும். மிகவுஞ் செழுமையான தோகைகளுடைய பறவைகள் அமிழ்தம் போன்ற இனிய பாட்டுக்களை மிழற்றிக் கொண்டிருக்கும். நம்மைச் சுற்றியுள்ள எழில் நலங்களைப் பருகுவார்போன்று களிக்கும் பருவம் முதிர்ந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/145&oldid=1623843" இலிருந்து மீள்விக்கப்பட்டது