பக்கம்:மறைமலையம் 3.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
115

செல்லக்கூடுமென்பதனைத் தெரிந்து கொள்ளும் விருப்பத்தை என்பால் எழுப்பி விட்டது. யான் கல்வியறிவு பெற்றுவந்த ஆண்டுகள் எல்லாவற்றிலும் இந்நண்பர் எனக்குப் பிரியாத் துணையுடனிருந்து வழிகாட்டி வந்தார். என் வாழ்நாள் எல்லை அணுகுதலும் அவள் எனக்கு ஆறுதலை உண்டு பண்ணினாள்; அவள் என்னை வரவேற்றுச் சூக்கும உலகத்திற்குச் செல்லும் வழியையும் எனக்குக் காட்டினாள். அவளுடைய அன்பான உதவியினால் அச்சத்தையும் மரணத்தையும் பற்றின எல்லா நினைவுகளையும் யான் அறவே ஒழித்துவிட்டேன்; ஆவிவடிவில் எங்களை மறுபடியும் ஒருங்குகூட்டும் நேரத்தை மிகுந்த களிப்போடும் எதிர்நோக்கி வாழ்த்தினேன்.

துன்பம் இன்றியே இவ்வுடம்பைக் கடந்து சென்றேன்; துன்பத்தைப்பற்றி யான் உணரவும் இல்லை; ஆனால், என்னுடம்போ இனிதாக இளைப்பாறிக் கிடந்தது; அதனினின்றும் விடுபட்ட எனதுயிரோ, பழுதாய்ப்போன ஒரு சட்டையைப் பார்ப்பதுபோல, அதன்மேல் அந்தரத்தில் நின்று கொண்டு அதனைப் பார்த்தது. ஒரு நொடிப் பொழுதேனும் கழிந்து போவதை யான் உணர்ந்திலேன். எனதுள்ளம் உறங்க வில்லை. என் ஆன்ம உணர்வுகளில் எதனையும் ஓர் இமைப் பொழுதேனும் யான் இழந்து விடவும் இல்லை. யான் இறந்து போகப் போகிறேன் என்பது எனக்குத் தெரியும். எனதுயிர் பருவுடம்பைப்பற்றி யிருந்த நிலையைப் படிப்படியாக விட்டு வரும் ஒவ்வோர் இமைப்பொழுதையும் நான் அறிந்தேன். எனக்குப் பக்கத்திலே யிருந்து என்னைப் பார்த்துக்கொண்டிருந்த அன்பர்கள் எவ்வாறு இருக்கிறார்கள் என்று காணும் பொருட்டும் யான் செல்லுகிற புதிய வாழ்க்கையைக் குறித்து அவர்கள் அஞ்சுகிறார்களா என்று நோக்கும் பொருட்டும், பற் பல ஆண்டுகளாக நாங்கள் ஒன்றுசேர்ந்து கற்றறிந்த பொருள்களிலிருந்து அவர்களை இதனைச் செவ்வையாகப் பொறுத்துக் கொள்ளுகிறார்களா வென்று தெரியும் பொருட்டும், நீங்கள் விட்டுப் புறப்பட வேண்டிய ஒரு வீட்டைச் சுற்றிப் சுற்றிச் பார்ப்பதுபோல, இடையிடையே எனதுடம் பாகிய குடியிருப்பினுள் யான் நுழைந்தேன். அவர்கள் மனவுறுதி யோடும் அன்பான உருக்கத்தோடும் கடவுளை வேண்டிக் கொண்டிருந்தனர்; பிரிந்துபோகும் உயிரின் பருவுடம்பைப் பறிகொடுப்பதில் ஓர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/148&oldid=1623853" இலிருந்து மீள்விக்கப்பட்டது