பக்கம்:மறைமலையம் 3.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
118

❖ மறைமலையம் - 3 ❖

போயிருக்க வேண்டு மென்று எண்ணினேன்; மற்றுஞ் சிலவேளை தத்தம் எல்லைகளிற் செல்லும் கோள்களின் தெளிவான ஓசைகளை யான் கேட்டதாகவும் எண்ணினேன்; வேறு சில வேளை தொலைவில் ஒலிக்கும் இசையின் ஓசையை யான் செவியேற்றதாகவும் எண்ணினேன். ஒளியும் நிழலும் ஒருங்கு கலந்து பரவியுள்ள விளக்கமான வாயில் ஒன்றினுள்ளே நாங்கள் இப்போது வந்து நின்றோம். சூக்கும உலகத்திற்கும் தூல உலகத்திற்கும் நடுவில் உள்ளதான நுழைவாயில் இதுதான் என்றும், இதன் வழியாக ஆன்ம தத்துவ உண்மை யுலகுக்கு யான் செல்லப்போகிறேன் என்றும் சொல்லக்கேட்டேன். முன்னே எனக்குத் தோன்றிய காட்சிகளில் யான் அங்கே சென்றிருந்த துண்டு. முன்னெல்லாம் மற்றையோர் உதவிகொண்டு யான் அச் சூக்கும உலகங்களைப் பார்த்துவந்தேன்; ஆனால் இப்போதோ யானே என் ஆன்மசக்திகளைக் கொண்டு பார்க்கலானேன். முன்னர் எனக்கு நேர்ந்த பார்வையினும் இப்போது நேர்ந்தது முற்றிலும் வேறானதாயிருந்தது. இப்போது நாங்கள் சென்ற ஒவ்வோரி டத்தும் புதிய புதிய அழகுகளைக் கண்டேன். என் அகக் கண்ணானது சுற்றிலுமுள்ள பொருள்களைக் காணத்தக்க சுறுசுறுப்புடையதானதோடு, அப்பொருள்களின் ஆன்மாக்களையும் நன்கு காணலாயிற்று; ஒவ்வொரு வடிவமும் இங்குள்ள சுவர்களைப்போலத் தொடக்கூடியதா யிருந்தாலும், உள்ளும் புறம்பும் நன்கு விளங்கித் தெளிவாயிருந்தது; யான் கண்ட எல்லாப் பொருளிலும் ஒரு சீவதாது ஊடுருவித் தோன்றியது.

இனி, அக் கட்டிடத்தின் தன்மையைப்பற்றி விசாரணை செய்யலானேன். யான் புகுந்த வாயிலின் அமைப்பானது யான் சிந்திக்கக்கூடிய எல்லவாற்றைப் பார்க்கிலும் மிகப் பருமனான கோபுரவாயிலை அல்லது ஒரு தேவாலயத்தைப் பெரிதும் ஒத்ததா யிருந்தது, பலதிறப்பட்ட நிழலும் பல அளவான நிறங்களும் நிரம்பப் பொருத்தமாகவும் தெளிவாகவும் கலந்து கூட்டப்பட்ட அழகிய உருவங்களோடு அக் கட்டிடம் சேர்ந்து நின்றமையாலே அதனை உயிரோடு கூடிய ஓர் உருவமாகவே யான் நம்பக்கூடியதா யிருந்தது. என் தோழர் எனது கருத்தை உணர்ந்து ‘இந்தப் பொருள் நிலத்தின் மேலுள்ள எல்லாப் பொருள்களினும் வேறென்பது முற்றிலும் உண்மைதான்; சலவைக்கல்லின் துண்டுகளாலும், உயர்ந்து மணிகளாலும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/151&oldid=1623898" இலிருந்து மீள்விக்கப்பட்டது