பக்கம்:மறைமலையம் 3.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
122

❖ மறைமலையம் - 3 ❖

கொண்ட நல்லெண்ணங்களும், வேண்டுகோள் மொழிகளும், நல்நோக்கங்களும், நெடுநாளைக்கு முன்னமே யான் மறந்து போன செய்கைகளும் அங்கே உயிரோடு அழகாய் விளங்கினவே யல்லாமல் வேறுதூணாகவும் பாவை யாகவுந் தோன்றவில்லை. எனதுயிர் வாழ்க்கையிற் கிளைத்த நினைவுகளும் வாழ்த்துரைகளும் நல்நாட்டங்களும் எனக்கெதிரில் ஒரு வரிசையாக ஒழுங்குபடுத்தப் பட்டிருத்தலைக் கண்டேனேயன்றி என்னுடைய குறைபாடுகளைக் கண்டேனில்லை; ஆகவே, அவரை நோக்கி : ‘இஃது என்னை? இந்த நமது இருப்பிடத்தில் என் நல்லெண்ணங்களை மாத்திரங் காண்கின்- றேனே யல்லாமல் என் குறைபாடுகளைக் காணவில்லையே?’ என்று உடனே வினவினேன். அதற்கு அவ்வம்மையின் நினைவு ‘நம் ஆன்மாக்கள் இருக்கும் சூக்கும உறைவிடத்தில் குறைபாடுகள் இருக்கமுடியா; அவற்றை நீர் வாயிலினிடத்தே கண்டிருப்பீர்; உமது வழிநெடுக நீர் அவைகளைப் பார்த்திருப்பீர்; உயிர்த் தன்மை வாய்ந்த சூக்கும உறைவிடத்தில் குறைவில்லாதனவே முடிவான உருவும் வடிவும் எடுக்கக்கூடும்?’ என்று விடை பகர்ந்தது.

யான் எவ்வளவு குறைபாடு உடையவன் என்பதை அப்போதுதான் கண்டேன்; யான் தகுதியற்றவன் என்னும் உணர்ச்சியானது அவ்வின்ப நிலங்களிலிருந்து என்னைப் பின்வாங்கிச் செல்லும்படி செய்யவல்லதாயிருந்தது; ஆனால், அவ்வம்மையார் என்னை அச்சமேனும் நடுக்கமேனும் அடையலாகாதென்று கற்பித்தார். ஏனெனில், மண்ணுலகத்தைப் பற்றிய ஒவ்வொரு நினைவும் குற்றமும் எனது முயற்சியினாலேயே நீக்கப்பட வேண்டுமாதலின் என்பது. ‘இவ்விடத்தே நிலையாகத் தங்குவதற்கு ஏற்ற தன்மை இன்னும் உம்மிடத்தில் முற்றும் உண்டாகவில்லை; உமது இல்லம் இதுதான்; உமது முயற்சியினாலும், கடவுள் வழிபாட்டினாலும், ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நாழிகையும் வளரும் அறிவினாலும் சூக்கும உலகின்கண் உள்ள இவ்வீட்டின் கண் தாராளமாய் மகிழ்ச்சியும் தன்னுணர்வும் மிகுந்து நீர் இருக்கப்பெறுவீர்,’ என்று அவ்வம்மையார் மொழிந்தார்.

அதன்பிறகு தான் முதன் முதல் யான் களைப்படையக் கண்டேன். இப் புதிய உறையுளின் பேரொளியும், உள்ளத் தெழுந்த களிப்பும், துன்பத்தினின்றும் விடப்பெற்ற உணர்ச்சியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/155&oldid=1623969" இலிருந்து மீள்விக்கப்பட்டது