பக்கம்:மறைமலையம் 3.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
123

என்னைக் களைப்படையச் செய்தன. யான் ஓர் உயிரென்றும், இனி யான் என் உடம்பிற் புகுதலாகாதென்றும் உடனே நான் தெரிந்து கொள்ளக் கூடவில்லை. முந்திரிக் கொடிகளாலும் மலர்களாலும் பின்னலாயுள்ள ஒரு பந்தரினால் இவ்வுறையுளின் மற்றப் பகுதியினின்றும் பிரிக்கப்பட்டதுபோற் றோன்றிய ஒரு தனியறைக்கு அவ்வம்மையார் என்னை நடத்திச் சென்றார். இதற்குட்சென்று இவ்வளவு நேரம் என்று அறியாமல் நெடுநேரம் அங்கே உறங்கினேன்; யான் மறுபடியும் விழித்தெழுந்ததும் என் ஆன்மசக்திகளெல்லாம் புதுக்கப் பட்டதுபோல் உணர்ந்தேன்; என்னை முதலிற் களைப்படையச் செய்த மகிழ்சிறந்த ஆன்மதத்துவ எழில் நலங்கள் இப்போது என்னை மிகவும் வலிவடையப் புரிந்தன. எப்போதும் என் பக்கத்திலிருந்த அவ்வம்மையாரை நோக்கி, ‘இப்போது நான் ஆயத்தமாய் இருக்கின்றேன்; இச் சிறந்த உயிர்வாழ்க்கையை இன்னும் மிகுதியாக எனக்குக் காட்டுங்கள்,’ என்றேன்.


முதலில் மெதுவாகவும் வேண்டாவெறுப்பாகவும் இருந்ததுபோல் அல்லாமல் இப்போதுடனே எங்கள் வழியானது திறந்து காணப்படுவதாயிற்று; எனக்கெதிரே தூரத்திலிருந்தாலும் தெளிவாகப் புலப்பட்ட ஆவிகளின் கூட்டம் ஒன்றைக் கண்டேன். மண்ணுலகத்தில் எனக்கு மிகுந்த பழக்கமும் அறிமுகமும் உள்ளவராயிருந்தவர்களை அருகிற் கண்டேன். அவ் ஆவேசக் கூட்டத்தினின்றும் வந்து என்னை முதன்முதல் வாழ்த்தித் தாம் அங்கு வந்திருத்தலைத் தெரிவித்தற் பொருட்டு மிகவும் பரபரப்போடு முயன்றவர் நியூயார்க் நீதிமன்றம் என்னும் பத்திரிக்கைக்கு முன்னே ஆசிரியரா யிருந்த ஹொரெஸ் கிரீலி என்னும் என் நேசரேதாம். இவர் சில காலம் ஆன்மதத்துவ விசாரணை செய்தவராயிருந்தாலும், வெளிக்கு அவ்வாறு தோன்றினார் அல்லர். ‘உம்மை வாழ்த்திப், பல ஆண்டுகளாக நீதியின்றிருந்த நிலையை மாற்றிக் கொள்ள விரைந்து வந்தேன்,’ என்று அவர் கூறினார். யான் ‘அஃது என்னை?’ என்று வினவினேன். அதற்கு அவர் ‘நீர் இந்தப் புதிய புதிய உயிர் வாழ்க்கையைப் பற்றி எடுத்துக் காட்டின சான்றுகளை நான் குறைவாக மதித்தேனே; இப்போது இஃது உண்மைய னுபவமா யிருத்தலைக் கண்டு இங்ஙனம் கண்ட உண்மையை உமக்கு எடுத்துரைத்தனால் மனஅமைதி பெற்றிருக்கின்றேன்,’ என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/156&oldid=1623970" இலிருந்து மீள்விக்கப்பட்டது