பக்கம்:மறைமலையம் 3.pdf/159

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
126

❖ மறைமலையம் - 3 ❖


மானத ஆவேசத் தோற்றங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் தமது வலியையும் நேரத்தையும் செலுத்தி நிற்பவரான மற்றொருவரைப் பிறிதோர் இடத்திற் கண்டேன். அவரும் கல்வியின் மிக்கவராயிருந்தார்! யோக நித்திரையைப் பற்றித் தாம் கண்டுபிடித்த கோட்பாடுகளால் பௌதிகநூற் சரித்திர காலத்தில் ஒரு பெரிய விசேஷத்தை விளைவித்த மெசுமர் (Mesmer) என்பவரைப் பற்றியே யான் குறிப்பிட்டுச் சொல்லுகின்றேன். அவர் இப்போது ஆவேசங்களை வசப்படுத்தும் வசிய நூலாராய்ச்சியில் தலையிட்டிருக்கின்றனர். அவருக்கு மாணவகரும் கூட விருந்து உதவிசெய்வோரும் உளர்; இவர்கள் ஓரெண்ண முடையவராய் ஒன்றுபட்டு மந்திரசக்தி வாய்ந்தோரை ஆவேசித்தும், அவர்கள் மேலோங்குதற்கு உதவி செய்தும், தம் நண்பர்க்குச் செய்தி அனுப்புமாறு தம்மைச் சூழ்ந்திருக்கும் ஆவேசக் கூட்டத்தார்க்கு ஒத்தாசை புரிந்து கொண்டு மண்ணுலகத்தின்மேல் இயங்குகிறார்கள். உங்கள் இருப்பிடங்களுக்கு வந்து கதவைத் தட்டுதலானும் ஆவேசம் ஏறி ஆடுதலானும் நீங்கள் அறியாத வேறு வகையானும் தமது இருப்பை உங்களுக்கு அறிவிக்கும் வண்ணம் புதிதாகக் கண்டுபிடித்த இவ்வுண்மையைப் பிள்ளைகளைப்போற் கற்றுக்கொண்டு வந்த கணக்கில்லாத பல்லாயிரம் ஆவிகள் தனித்தனிக் கூட்டமாக இவர்களைச் சூழ்ந்திருக்கக் கண்டேன். நீங்கள் உங்கள் நண்பர்களுக்குச் செய்தி அறிவிக்கும்படியான ஒருவழியை அல்லது தந்தியைக் கற்றுக்கொள்ளுதற்கு வகுப்புகளிற் சேர்வதுபோல, ஆன்மதத்துவ வாழ்க்கையைத் தெரிந்து கொள்வதற்குரிய இச் சபைகளிற் சேரும் விருப்பம் உள்ள உங்கள் நண்பர்கள் இந் நிலவுலகத்துள்ளார் பலர்க்கு உண்டு: இப்போது நிலவுலகத்தை அசைத்துவரும் அவ் வாற்றலைப் பெறும் பொருட்டும், மனிதர்க்கு ஆவேசங்களின் உண்மையைத் தெரிவித்தற் பொருட்டும் அவைகள் அவரைச் சூழ்ந்து நின்றன.

இனிப் பல தேச மாந்தரின் சரித்திரங்களைப் பற்றிக் கருத்தாய்ப் பேசிக்கொண்டிருந்த வேறோர் உயர்ந்த கூட்டத்தாரைக் கண்டேன்; இந் நிலவுலகத்தைத் துறந்து சென்ற ராஜதந்திர நிபுணர்களின் முகங்களையும் உருவங்களையும் யான் அக் கூட்டத்தின் இடையே தெளிவாகத் தெரிந்து கொள்ளக் கூடியதா யிருந்தது. ஒரு கூட்டத்தின் இடையே உவாஷிங்டன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/159&oldid=1624391" இலிருந்து மீள்விக்கப்பட்டது