பக்கம்:மறைமலையம் 3.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
132

❖ மறைமலையம் - 3 ❖

இருத்தலை ஊர்ப் பிராயணஞ் செய்தவர்கள் நன்குணர்வார்கள். இன்னும் இவ்வாறு பலவேறு வகையாகக் காணப்படும் மக்களுடைய சமயக்கொள்கைகளும், அவ்வச் சமயங்களில் வணங்கப்படும் தெய்வங்களும், அவற்றை வழிபடும் முறைகளும், நடையுடை பாவனைகளும் அளவிறந்த பேதங்கள் உடையன வாய் இருக்கின்றன. இத்தனை பேதங்களையும் தாமே நேரிற் கண்டாயினும், அல்லது நூல்களிற் பார்த்தாயினும் உலகியலறிவு முதிரப்பெற்றவர்களுக்கே யாம் இங்கே கூறிய வேறுபாடுகளின் மிகுதி புலப்படா நிற்கும். தாமிருக்கும் இடத்தையன்றி வேறெதனையும் எவ்வாற்றானும் அறிந்து கொள்ளாதவர்க்கு இவ்வுண்மை ஒரு தினைத்துணையும் புலப்படாது. அவர்கள் ‘கிணற்றுத் தவளையை’யே ஒப்பர். அவர்க்குத் தாமிருக்கும் நாடே ஒப்புயர்வற்றது; வேறு சிறந்த நாடுகள் பல இருக்கின்றன என்று அறிந்தோர் சொல்லினும், அவர் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டார்; ஒருகால் ஏற்றுக் கொண்டாலும் அவை மக்களும் பிறவுயிர்களும் இல்லாத வறட்டு நிலமாகத்தான் இருக்க வேண்டுமென்று நினைப்பர்; அன்றி ஏதோ ஒரு வகையாய் பிற நாடுகளிலும் மக்களும் மற்றை உயிர்களும் இருக்கலாம் என்று எண்ண நேர்ந்தாலும், அம் மக்கள் மிருகத்தை ஒத்தவராய் இருப்பார்களே யல்லாமல் தம்மைப்போல் நாகரிக வாழ்க்கை உடையவராய் இருக்கக்கூடும் என்று அவர் நினைக்கமாட்டார். பின்னர் ஒருகால் தமக்குள்ள சிறிது நல்வினை வயத்தால், மற்றை மாந்தரும் சிறிது நாகரிக முடையவர்தாம் முடையவர்தாம் என்று கருத நேர்ந்தாலும், அவர்கள் தம்மினும் அழகிற் குறைந்தவரே யாவரெனவும், அவர்களுடைய நடை யுடை பாவனைகள் தம்மினும் மிகத் தாழ்ந்தனவே யாகு மெனவும், அவர்கள் கைக்கொண்டுள்ள சமயக் கொள்கைகள் பயனற்ற வெறும் பொய்களேயாமெனவும், அவர்கள் மறுமையில் நரகத்தையே அடைவரெனவும், தாமும் தம் சமயமும் தம் தெய்வமுமே உயர்ந்தனவா மாதலால் தாம் மட்டுமே மறுமையில் துறக்க வாழ்வடைவது திண்ணமெனவும் கூறிச் செருக்குவர். தம்முடைய அறிவும் அனுபவமும் உயர்ந்தனவோ என்று ஒப்பிட்டு ஆராய்ந்து பார்த்தற்கும் அவர் ஒரு சிறிதும் ஒருப்படமாட்டார். இன்ன தன்மை வாய்ந்தவர், அயல்நாட்டவர்க்கு அவர் தம் மத இயல்புகளுக்கியைந்த துறக்க நரக உலகங்களும் மறுமையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/165&oldid=1624584" இலிருந்து மீள்விக்கப்பட்டது