பக்கம்:மறைமலையம் 3.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
133

உளவாய் இருக்குமென்று எள்ளளவும் உணர மாட்டார். ஆகவே, அவ்வியல்பினரை விடுத்து விரிந்த நோக்கமும் தம்மோடு பிறரை ஒப்பிட்டுப் பார்க்கும் ஆராய்ச்சியும் வாய்ந்தவரைக் குறித்தே இவ்வுண்மையை இங்கு வரையப்போகின்றாம்.

மேலே காட்டியவாறு பலவேறு வகைப்பட்ட நாடுகளும் ஆங்காங்குப் பல்வேறு வகையான மாந்தர்களும் இந் நிலவுலகத்தில் இருத்தல்போலவே, இதனைக் கடந்துள்ள எண்ணிறந்த கோடி யுலகங்களிலும் அவரவர் தன்மைக்கும் சமயக்கொள்கைக்கும் ஏற்ற இடங்கள் அளவில்லாமல் இருக்கின்றன. இங்குள்ள மாந்தர்கள் இந் நிலவுலகத்தை விட்டு வேறு மேலுள்ள உலகங்களுக்குச் செல்வதையே இறத்தல் என்று சொல்லுகிறோம். தமிழில் ‘இறத்தல்’ என்னுஞ் சொல்லுக்குப் பொருள் ‘கடத்தல்’ அல்லது ‘ஓரிடத்தை விட்டு வேறோர் இடத்திற்குப் போதல்’ என்பதேயாம். இந்த நிலமானது தன்னோடொத்த பொருள்களைத் தன்பால் இழுத்துக் கொள்ளும் ஆற்றல்வாய்ந்ததாய் இருத்தலின், நாம் இருத்தற்கு இடமாயுள்ள இந்த நம் மண் உடம்போடு கூடி நாம் மேல் உலகங்களுக்குச் செல்ல இயலாதவர்களாயிருக்கிறோம். இந்த மண்ணுடம்பு பருப்பொருளாயிருத்தலில் இது தன்போற் பருப்பொருளாயுள்ள இந் நிலத்தால் இழுத்துக் கொள்ளப் படுகின்றது. இவ்வாறு இவ்வுடம்பு இந் நிலத்தைக் கடந்து மேற்செல்லமாட்டாமைப் பற்றியே, இதனுள்ளிருந்த உயிர்தான் மேற் செல்லுதற்கு இசைந்த நுண்ணிய வுடம்போடு கூடி இதனை விட்டுப் போகின்றது. இதனையே மரணம் என்றும் சாவு என்றும் இறப்பு என்றும் வழங்கி வருகிறார்கள். இனி வெள்ளைக்காரர் தாம் வசிக்கும் நாட்டின்கண் ஓர் ஊரிலிருந்து பிறிதோர் ஊருக்குச் செல்வதுபோலவும், நம் இந்தியர் தாம் வசிக்கும் இவ்விந்திய நாட்டின்கண் ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்குப் போவது போலவும் இச் சாதியார் தமக்கு உறைவிடமாயுள்ள இந் நிலவுலகத்தைக் கடந்து செல்லுங்காலும் தத்தம் இயல்புக்கு ஒத்த மேலுலகங்களுக்கே ஏகுகின்றார்கள். இனி ஊக்கமும் உழைப்பும் மிகுந்து அறிவாற் சிறந்தவர்கள் தாம் வசிக்கும் நாடுகளின் எல்லையுங் கடந்து தொலைவிலுள்ள ஏனை நாடுகளு க்குஞ் செல்வதுபோல, மேலுலகங்களிலும் ஓருலகத்திற்குரியவர்களிற் சிலர் ஏனையோர் உலகத்திற்குஞ் செல்வதுண்டு. ஆயினும், இஃது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/166&oldid=1624585" இலிருந்து மீள்விக்கப்பட்டது