பக்கம்:மறைமலையம் 3.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

137



20. சூரியமண்டில இயற்கை

சூரிய மண்டிலம் நமது மண்ணுலகத்திற்கு ஒன்பது கோடியே முப்பது லட்சம் மைல் தூரத்தில் உள்ளதென்று இஞ்ஞான்றை வான நூற் புலவர் கணக்கிட்டிருக்கிறார்கள். ஒரு மைல் அல்லது இரண்டு மைல் உயரமுள்ள ஒரு மலையின் உச்சியில் ஓங்கி வளர்ந்திருக்கும் ஓர் ஆலமரம் கீழிருந்து நோக்கும் நம்மனோர் கண்களுக்கு எவ்வளவு சிறியதாகவும் அம் மலையுச்சியில் ஏறிப் பார்ப்பவர்க்கு எவ்வளவு பெரியதாகவுந் தோன்றுகின்றது. இனி இருபது மைல் அல்லது முப்பது மைல் உயரமுள்ள ஒரு மலைமேல் அவ் வாலமரம் இருப்பதாக வைத்துக் கொள்வோமாயின் அது கீழிருந்து நோக்கும் நம் கண்களுக்குச் சிறிதும் புலப்படாதென்பது எவரும் உணர்வரன்றோ? அன்றிப் புலப்படுமென்றே எண்ணுவோமாயினும், அஃது அதற்குத் தக்க பரிமாணம் உடையதாய் நமக்குத் தெரிந்துள்ள ஆலமரங்களைவிட எத்தனையோ பங்கு பெரியதாயிருக்க வேண்டுமென்று உணர்வோமன்றோ? இருபது முப்பது மைல் தூரத்திலுள்ள பொருள்களே மிகவும் பெரியனவாயிருக்க வேண்டுமென்று நமக்குத் தோன்று மானால், நூறுமைல், ஆயிர மைல், பதினாயிர மைல், ஒரு லட்ச மைல், பத்து லட்சம் மைல், ஒரு கோடி மைல் தூரங்களிலிருந்து நம் விழிகளுக்குத் தோன்றும் பொருள்கள் வரவர எவ்வெத் தனை மடங்கு பெரியனவா யிருக்கவேண்டுமென்பதை நாம் விண்டு சொற்றலும் வேண்டுமோ? சூரியமண்டிலமோ ஒன்பது கோடியே முப்பது லட்சம் மைல் தூரத்திலிருந்தும் நம்முடைய கண்களுக்குச் செவ்வனே விளங்கித் தோன்றும் பெருவடிவம் வாய்ந்ததாய்க் காணப்படுகின்றது. ஆகவே, அது நம்முடைய கண்களுக்குத் தோன்றுகிறபடி யன்றித் தன்னியற்கையில் மிகப் பெரியதொரு கோளமாயிருக்க வேண்டுமென்னும் உண்மை இனிது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/170&oldid=1624589" இலிருந்து மீள்விக்கப்பட்டது