பக்கம்:மறைமலையம் 3.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

140



21. சந்திரமண்டில இயற்கை

இனிச் சந்திரமண்டிலத்தைப்பற்றி ஒரு சிறிது கூறுவாம். இது நமது நிலவுலகத்திற்கு இரண்டு லட்சத்து முப்பத்தேழாயிரத்து முந்நூறுமைல் தூரத்தில் தூரத்தில் உள்ளது! இது சூரிய மண்டிலத்தைவிட நமக்கு மிகவுங் கிட்ட உலவுகிறதென்றே சொல்லலாம். இவற்றின் சேய்மை அண்மைகளை இன்னுந் தெளிவாகத் தெரிந்து கொள்ள விரும்புவார்க்கு மற்றுமொரு வழி காட்டுவாம். ஒருமணி நேரத்திற்கு முப்பதுமைல் தூரம் மேலே செல்லக்கூடிய ஒரு வானவூர்தியில் ஒருவர் அல்லும் பகலும் ஓயாது பிரயாணஞ் செய்யக்கூடுமாயின் அவர் சூரிய மண்டிலத்திற் போய்ச் சேரச் சிறிதேறக்குறைய முந்நூற்றைம் பத்து நான்கு ஆண்டுகள் ஆகும். இனி, அவர் அதே ஊர்தியில் அங்ஙனமே சந்திரமண்டிலத்திற்குச் செல்லக்கூடுமாயின் சற்றேறத்தாழ ஓர் ஆண்டில் அங்கே போய்ச் சேரலாம். இ பிரயாணக் கால அளவினைக் கொண்டு நமதுலகத்திற்கு ஞாயிற்று மண்டிலம் எவ்வளவு சேய்மையிலிருக்கிற தென்றும் திங்கள் மண்டிலம் அதனினும் நமக்கு எவ்வளவு அண்மையிலிருக்கிறதென்றும் நன்கு பகுத்தறிந்து கொள்ளலாம். இனி, நமது நிலவுலகம் சிறிது கூடக்குறைய எண்ணாயிர மைல் குறுக்களவுள்ளதாயிருக்கத், திங்கள் மண்டிலமோ இரண்டாயிரத்து இருநூறு மைல் மாத்திரமே குறுக்களவுள்ளதாகக் கணக்கிடப்பட்டிருத்தலால், அது நிலவுலகத்தை விடச் சிறியதென்றும் அதனால் அது நிலத்தின் ஆற்றலால் இழுக்கப்பட்டு நிலவுலகத்தைச் சுற்றிச் சுழலுகிறதென்றும் இனிதறிந்திருக்கின்றோம். இனித் தொலைவு நோக்கிக் கண்ணாடியின் உதவிகொண்டு நோக்கும் வானநூற்புலவர் திங்கள் மண்டிலத்தில் ஆயிரத்துக்கு மேல் மலைகள் பல காணப்படுகின்றன என்கின்றனர். இந்த மலைகளே நம்முடைய வெறுங் கண்களுக்குக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/173&oldid=1624592" இலிருந்து மீள்விக்கப்பட்டது