பக்கம்:மறைமலையம் 3.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142


22. செவ்வாய் மண்டில இயற்கை

இனிச் செவ்வாய் மண்டிலத்தைப்பற்றிச் சிறிது பேசுவாம். நமது நிலவுலகத்திற்குச் சந்திரமண்டிலம் மிக அருகில் இருப்பதுபோல் இல்லாவிட்டாலும், சூரியனைவிட நமக்குக் கிட்டத்திலிருப்பதும் பெரும்பாலும் இந் நிலவுலகத்தை ஒத்திருப்பதும் செவ்வாய் மண்டிலமே தான். இது சூரியனைச் சுற்றிச் செல்லும் வான்வழி நேர்வட்டமாய் இல்லாமல் கோழி முட்டை வடிவினதாய் இருத்தலின் ஈது இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை மூன்றரைக்கோடி மைல் தூரத்தில் இந் நிலத்திற்கு அண்மையிற் காணப்படுகின்றது; மற்றைக் காலத்தில் இதற்கு ஆறுகோடியே பத்துலட்சம் மைல் தூரம் அகன்று போகின்ற தாகலின் அப்போது அது செவ்வையாகக் காணப் படுவ தில்லை. இனி இஞ்ஞான்றை வானநூல் ஆசிரியர்கள் நிரம்பச் சிறந்த தொலைவு நோக்கிக் கண்ணாடிகளால் நோக்கிச் செவ்வாய் மண்டிலத்திற் செம்மண் நிலமும் பச்சை நிறமுள்ள கடல்களும் அமைந்துள்ளனவென்று கூறுகிறார்கள். இவ்வாறு அதன்கண் உள்ள மண் சிவப்பா யிருத்தலினாற்றான், அஃது ராக் காலத்தில் செவ்வென்ற ஒளியை வீசுகின்றது; இது பற்றியே தமிழிலும் ‘செவ்வாய்’ என்னும் பெயர் அதற்கு வழங்கி வருகின்றது. இனி, இந் நிலவுலகத்தின் வடக்கு முனையான உத்தர துருவமும் தெற்கு முனையான தட்சிண துருவமும் குளிர்மிகுந்த இடங்களாகலின், அங்கேயுள்ள நிலமுங் கடலும் பல்லாயிர மைல் தூரம் வெண்மையான பனிப்பாறைகளால் மூடப்பட்டிருக்கின்றன; இதைப்போலவே செவ்வாய் மண்டிலத்தின் வடமுனை, தென்முனை இரண்டிலும் ஆயிரத்து இருநூறு மைல் தூரம் வரையில் தூவெள்ளையான பனிக்கட்டி நிறைந்து பரவியிருக்கின்றது. இங்ஙனம் பரவியிருப்பது பனிக்கட்டிதான் என்று எவ்வாறு உறுதிப்படுத்தக் கூடுமெனின்; இந் நிலவுலகத்தின் அவ் விரண்டு முனைகளிலும் வேனிற்கால வெப்பம் மிகும்போது அங்குள்ள பனிப்பாறைகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/175&oldid=1624598" இலிருந்து மீள்விக்கப்பட்டது