பக்கம்:மறைமலையம் 3.pdf/176

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
143

உருகிச் சுருங்குதல் போலவும், மறித்தும் குளிர்காலத்துக் குளிர் மிகும்போது அப் பனிப் பாறைகள் மிகப் பெருத்துப் பரவுதல் அப்பனிப் போலவும் செவ்வாய் மண்டிலத்தின் அவ் விரண்டு முனைகளிலும் வேனிற் காலத்தில் அவ் வெண்பனிப் பிண்டம் சிறுகவும், குளிர்காலத்தில் அது பெருகவுங் காண்கின்றோம். இன்னும் அச் செவ்வாய் மண்டிலத்தில் ஒன்றையொன்று ஊடறுத்துச் செல்லும் அகல நிகளத்தில் மிகப் பெரிய பெரிய யாறுகள் பற்பல ஓடுகின்றன. இவ் யாறுகள் அதன் வடமுனை தென் முனை வரையில் ஆங்காங்குள்ள பனிப்பாறைகளோடு தொடர் புற்றிருக்கின்றன; அப் பனிப்பாறைகள் உருகுங்காலத்து அவ்யாறுகள் நீர் நிரம்பிச் செவ்வாய் மண்டிலத்தின் மேற் பரப் பெங்கும் குறுக்குமறுக்குமாய்ப் பாய்ந்து அதன் நிலத்தை வளம்படுத்துகின்றன; இவற்றுள் இரண்டு யாறுகள் இரட்டையாக நெடுக ஓடுகின்றன. இவ்வாற்றால், பனிக்கட்டியும் நீரும் யாறும் நிலனும் கடலும் காலமும் இங்குள்ளது போலவே, செவ்வாய் மண்டிலத்திலும் அமைந்திருக்கும் உண்மை நன்கு தெளியப்படுகின்றது. இன்னும் உயர்ந்த மலைகள் பலவும் அம் மண்டிலத்திற் றோன்றுகின்றன. இம் மண்டிலம் நமது நிலவுலகத்திற் காற்பங்குதான் பரிமாணம் வாய்ந்தது. இதன்கண் மக்களி னுஞ் சிறந்த அறிவுடையரான உயிர்கள் வாழ்கின்றன ரென்று இப்போது வானநூல் ஆராய்ச்சி வல்ல பண்டிதர்கள் உரைக்கின்றனர். அது கிடக்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/176&oldid=1624595" இலிருந்து மீள்விக்கப்பட்டது