பக்கம்:மறைமலையம் 3.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144



23. புதன் மண்டில இயற்கை

இனிப் புதன் மண்டிலத்தைப்பற்றி மிகுதியான விவரங்கள் வானநூற் புலவராற் கண்டறியப்படவில்லை. அது நமது நிலவுலகத்திற்கு ஐந்துகோடியே முப்பது லட்சம் மைல் தூரத்தில் சூரியமண்டிலத்திற்கும் நமது மண்டிலத்திற்கும் இடையே சூரியனைச் சுற்றிப்போகின்ற தென்றும், நமது மண்ணுலகத்தை விட அது சிறியதாகுமென்றும், அது தன்னைத் தானே இருபத்தைந்து மணி நேரத்தில் சுற்றுவதால் அம் மண்டிலத்தின் கண் உள்ள ஒருநாள் நமது நாளுக்குச் சிறிதேறக் குறைய ஒத்ததே யாமென்றும், அஃது எண்பத்தெட்டு நாட்களில் சூரியனைச் சுற்றிச் செல்லுதலால் அங்குள்ள ஓர் ஆண்டு நமது ஆண்டில் நான்கிலொரு பாகமே ஆகின்றதென்றும் இஞ்ஞான்றை வானநூற் புலவர்கள் கூறுகின்றார்கள். நமது மண்ணுலகத்தின் நிழல் சந்திரமண்டிலத்தின்மேற்படுவதால் சந்திரன் வளர்வதுந் தேய்வதும்போற் காணப்படுகின்றதன்றோ? அங்ஙனமே புதன் மண்டிலத்தின் மேலும் ஏதோ மற்றொரு மண்டிலத்தின் நிழல் படுவதனாலே, அதுவும் வளர்வதுந் தேய்வதும்போற் காணப்படுகின்றது. புதன் மண்டிலத்தின் ஒளி சிறிது சிவப்பாகத் தோன்றுகின்றது; ஆனால் அதன் காரணம் இன்னதென்று புலப்படவில்லை. பழைய வானநூற் புலவர் ஒருவர் புதன்மண்டிலத்தில் பதினொரு மைல் உயரமுள்ள ஒரு மலை காணப்படுகின்றதெனக் கூறியிருக்கிறார். நமது நிலமண்டிலத்திலிருக்கும் மலைகளிலெல்லாம் மிகப் பெரியது ஐந்து மைல் உயரத்திற்குமேல் இல்லை. புதன் மண்டிலத்தை மேலே கவிந்திருக்கும் ஆவி தடிப்பானதா யிருத்தலால், இங்கிருந்து நோக்குவார்க்கு அங்குள்ள பொருள்களின் நிலை இன்ன தென்று புலப்படவில்லை. அது நிற்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/177&oldid=1624596" இலிருந்து மீள்விக்கப்பட்டது