பக்கம்:மறைமலையம் 3.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
146

❖ மறைமலையம் - 3 ❖

இதிற் காணப்பட்டு வந்தது; இவ்வடிவு இருபத்தேழாயிரம் மைல் நிகளமும் எண்ணாயிரம் மைல் அகலமும் வாய்ந்ததாயிருந்தது; அதனுருவம் முட்டையை ஒத்து விளங்கிற்று; நான்கு ஆண்டுகள் காறும் இக்கறையின் செந்நிறமும் மாறாமலே தோன்றி வந்தது; அதற்குப் பிறகு அதன் வடிவம் அப்படியேயிருக்க அதன் நிறம் மாத்திரம் மாறிப் போயிற்று. ஆனால் இவ் வடிவத்தின் உண்மை யின்னதென்று புலப்பட வில்லை. இனி, இம் மண்டிலத்தில் இவ்வாறு காணப்படும் கறை வடிவங்களுக்கும், ஞாயிற்று மண்டிலத்தில் இங்ஙனமே காணப்படும் கறை வடிவங்களுக்கும் ஏதோ ஓர் ஒற்றுமை யிருக்கவேண்டுமென வானநூலாசிரியர் கருதுகின்றனர்; இவை ஒரு மண்டிலத்திற் காணப்படுகையில் மற்றையதிலும் காணப்படுகின்றன. இனி நமது நிலமண்டிலம் ஒரு நிமிடத்துக்குப் பதினேழு மைல் விழுக்காடு தன்னைத் தானே சுற்றிக்கொண்டுபோக இவ் வியாழ மண்டிலமானது ஒரு நிமிடத்திற்கு நானூற்று அறுபத்தாறு மைல் விழுக்காடு தன்னைத் தான் சுற்றிக் கொண்டு செல்கின்றது. இஃது இங்ஙனம் விரைந்து செல்லுதலால் இம் மண்டிலத்தில் நடுவரை யோடும் இடம் பிதுக்கமாகவும் வடமுனை தென்முனைகள் தட்டையாகவும் உருவமைந்திருக்கின்றன. இஃதேன் இத்துணை விரைவாகச் செல்கின்றதெனின், இது ஞாயிற்றுமண்டிலத்திற்கு மிகவும் தொலைவிலிருத்தலால் அங்கு நின்றும் நமக்கு வரும் அவ்வளவு வெப்பம் இவ் வியாழ மண்டிலத்துள்ளார்க்கு வரமாட்டாது; ஆகவே, இது மிகவுங் கடுவிரைவோடு சுழலுதலி லிருந்து அக் குறைந்த வெப்பம் நிறைவு செய்யப்படுமாறு முதல்வன் அங்ஙனம் அமைப்பானாயினான். இன்னும் இவ் வியாழ மண்டிலம் தன்னிடத்திருந்தே வேண்டுமளவுக்கு வெப்பத்தைப் பிறப்பிக்க வல்லதா யிருத்தலினாலேயே, அங்குள்ள நீர் ஆவியாக மாறி முகிற்கூட்டங்கள் அங்கே உண்டாயிருக்கின்றன. இனி இவ்வியாழ மண்டிலத்தைச் சுற்றி ஐந்து சந்திர மண்டிலங்கள் சுழன்று செல்கின்றனவென இஞ்ஞான்றை வானநூற் புலவர் உயர்ந்த தொலைவு நோக்கிக் கண்ணாடியால் கண்டுரைக்கிறார்கள். இவ்வியாழ மண்டிலம் பத்து மணி நேரத்தில் தன்னைத் தானே சுற்றுவதால் அங்குள்ளார்க்குப் பகற்காலம் ஐந்துமணி நேரமும் இராக்காலம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/179&oldid=1624599" இலிருந்து மீள்விக்கப்பட்டது