பக்கம்:மறைமலையம் 3.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
151

வடதுருவத்தைவிடக் கருமையாகவும் நீலமாகவும் தென் படுகின்றது. வியாழமண்டிலத்திலுள்ள வரிவடிவுகள் நேராயிருக்க, இச் சனிமண்டிலத்திலுள்ளவை வளைந்து காணப்படுகின்றன. இவ்வுலகத்தின் உத்தர தட்சிண துருவங்களில் நிற மாறுதல்கள் புலப்படுதலால், அவ்விடங்களில் பனிப்பாறைகள் உருகுதலும் உறைதலுமா யிருக்கக்கூடுமென்று புகழ்பெற்ற வானநூற் புலவர் ஒருவர் நுனித்தறிகின்றார். இனி சனிமண்டிலத்தைச் சூழ்ந்துள்ள ஒரு வளையமானது தன்னில் மூன்று கூறாய்ப் பிளவுபட்டு மூன்று வளையங்களா யிருக்கிற தன்றும், அவற்றுள் முன்னுள்ள முதல் வளையம் ஒளி மிக்கதாயிருப்ப உள்ளமைந்த ஏனையிரண்டும் வரவர ஒளி குறைந்தனவாய்த் தோன்றுகின்றனவென்றும், நமது பார்வைக்கு வளையம்போல் விளங்கும் இவையெல்லாம் சனியுலகத்தைச் சூழ்ந்தோடும் எண்ணிறந்த சிற்றுலகங்களே யாமென்றும் வான்நூலார் மொழிகின்றனர். இனி நமது நிலவுலகத்தை ஒரு திங்களுலகமும், வியாழமண்டிலத்தை ஐந்து திங்களுலகமும் சுற்றியோடுதல்போல, இச் சனி மண்டிலத்தையும் எட்டுத் திங்கள் மண்டிலங்கள் அவ்வவற்றிற் கியைந்த உடம்போடு கூடிய உயிர்கள் உறைதல் கூடுமெனவும், அவ் வெட்டுலகங்களிலும் உறையும் உயிர்களுக்கு அவற்றின் நடுவேயுள்ள சனி மண்டிலம் வெயில் வெளிச்சந் தருவதேயாகக் கூடுமெனவும், இவ்வமைப்பின் திறத்தை உற்று நினைக்கும் வழிச் சூரியனையும் சூரியனைச் சூழ்ந்து செல்லும் கோள்களையும் போலவே சனியும் சனியைச் சுற்றிப்போகும் உலகங்களும் இறைவனால் ஏற்படுத்தப் பட்டுள்ளனவெனவும் வானூலாசிரியர் ஒருவர் இயம்புகின்றார். இனி இச்சனிமண்டிலம் பத்தரைமணி நேரத்தில் தன்னைத் தானே சுற்றுவதால் இம்மண்டிலத்தில் உள்ளவர்க்கு ஒரு பகல் ஐந்தேகால் மணியும் ஓர் இரவு ஐந்தேகால் மணியும் ஆகின்றன. இனி இம்மண்டிலம் ஞாயிற்றினைச் சுற்றிவர நம்முடைய ஆண்டுகள் முப்பது கழிதலால், நமது ஆண்டு முப்பது கொண்டதே சனி யுலகத்துள்ளார்க்கு ஓர் ஆண்டு ஆகிறது. இது நிற்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/184&oldid=1624929" இலிருந்து மீள்விக்கப்பட்டது