பக்கம்:மறைமலையம் 3.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
152

❖ மறைமலையம் - 3 ❖



7.எல்லா மண்டிலங்களிலும் உயிர்கள் உண்மை

இனி இதுகாறும் எடுத்துக் காட்டப்பட்ட உலகங்களில் உயிர்கள் உடம்போடுகூடி உயிர் வாழ்வதற்கேற்ற தன்மைகள் உண்டோ இல்லையோ வென்பதனைச் சிறிது ஆராய்ந்து பார்ப்போம். யாற்று மணலை அளவிடினும் அளவிடப்படாத பெரிய பெரிய உலகங்களெல்லாம் இருட்காலத்திரவில் வானத்தின்கண் முத்துக்கள் சிதறிக் கிடந்தாற்போற் சிறிய சிறியவாய்த் துலங்குதலை நாம் கண்கூடாய்க் காண்கின்றோம் அல்லமோ? ஒரு நொடிப்பொழுதில் இரண்டுலட்சம் மைல் தூரம் கடுகிச் செல்லும் வெளிச்சமானது அவற்றுட் சில மண்டிலங்களிலிருந்து நமது மண்ணுலகத்திற்கு வர ஐம்பதினாயிரம் ஆண்டுகள் ஆகின்றனவென்று இஞ்ஞான்றை வானநூற் புலவர்கள் கணக்கிட்டிருக்கின்றனர். இங்ஙனமாயின் அத்தனை நெடுந்தூரத்திலிருந்தும் நங் கண்களுக்குப் புலனாகும் அம் மண்டிலங்கள் எவ்வளவு பெரியனவா யிருக்கவேண்டும்! அவைகளிற் சில நமது ஞாயிற்று மண்டிலத்தைவிட எத்தனையோ பங்கு பெரியனவா யிருக்கின்றன! இனி நமது கட்புலனுக் கும், மிகவுயர்ந்த தொலைவுநோக்கிக் கண்ணாடிக்கும் எட்டாத இடங்களிற் சுழன்று செல்லும் எண்ணிறந்த உலகங்களைப் பற்றியும், அவற்றின் பேரளவினைப் பற்றியும் எமது சிற்றறிவு காண்டு எங்ஙனம் எடுத்துரைக்கவல்லேம்; இத்தனை உலகங்களுக்கும் நாம் இருக்கும் இம் மண்ணுலகத்தை ஒப்பிட்டுக் சொல்லப் புகுந்தால், இமயமலையைப்போன்ற எண்ணிறந்த பல மலைகளுக்கு மணலின் ஒரு துகளை ஒப்பாக வைத்துச் சொல்வதே சிறிது பொருத்தமுள்ளதாகக் காணப் படும். ஏனைப் பேருலகங்களுக்கு ஒரு சிறு துகளையும் ஒவ்வாத இந் நிலவுலகம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/185&oldid=1624930" இலிருந்து மீள்விக்கப்பட்டது