பக்கம்:மறைமலையம் 3.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ மரணத்தின்பின் மனிதர்நிலை ❖
153

மாத்திரம் மக்களும் மற்றைப் பல்லுயிர்களும் உயிர்வாழ்வதற்கு ஏற்ற இடமாக இறைவனால் வகுக்கப் பட்டிருக்க, அங்ஙனமே அவ்வருட் பொருளால் அமைக்கப்பட்ட அப் பெரிய பெரிய மண்டிலங்களெல்லாம் உயிர் வாழ்க்கைக்கு ஏற்றன வல்லவாய் இருக்கக் கூடுமோ? உயிர் வாழ்க்கைக்கு ஒரு சிறிதும் பயன்படாமல் அத்தனை உலகங்களையும் அவ்வாண்டவன் வேறு ஏதுக்காகப் படைத்தான்? என்று வினாவுமிடத்து அதற்கு வேறு விடை இன்மையின் உயிர்கள் இருத்தற் பொருட்டாகவே அவற்றை அமைத்தருளினா னென்பது சிற்றறிவினார்க்கும் இனிது விளங்கற் பாலதேயாம். எல்லாவுலகங்களும் உயிர்கள் இருத்தற்கு இடமாகவே அமைக்கப்பட்டன வென்பது பெறப் படவே, அவ்வெல்லா வுலகங்களினும் பலதிறப்பட்ட உயிர்கள் உண்டென்பதும் தானே பெறப்படும். இவ்வுண்மை இங்ஙனம் எளிதிற் பெறப்படுமாயினும், இதனை இம் முறையால் நம்பமாட்டாதவர்க்கு, அதன்கண் நம்பிக்கை பிறப்பித்தல் வேண்டி இஞ்ஞான்றை இயற்கைப் பொருள் நூலாராய்ச்சியின் வழியே அவ்வுண்மையை ஒரு சிறிது விளக்கிக் காட்டுவாம்.

ஞாயிற்றின் ஒளி வெளிப்பார்வைக்கு வெண்மை நிறம் உடை யதுபோற் றோன்றினும் அதனை உண்மையில் ஆராய்ந்து பார்க்குங்கால் அது சிவப்பு, கிச்சிலி, மஞ்சள், பச்சை, நீலம். அவுரி, ஊதா என்னும் எழுவகை நிறங்கள் உடையதாகவே இருக்கின்றது. இவ்வேழு நிறங்களும் கலக்கவேண்டும் அளவுப் படி ஒருங்கு கலந்த தொகுதியே வெண்மை நிறம் எனப்படுவதல் லாமல், வெண்மை எனத் தனியே ஒருநிறம் யாண்டும் இல்லை. இஃது எங்ஙனம் அறியக் கூடுமெனின், மூன்று பட்டை வடிவினதாய் உள்ள ஒரு பளிங்குத்துண்டை ஞாயிற்றின் கதிரின் எதிரே பிடித்தால், அக்கதிர் அப் பளிங்கினூடே நுழைந்து அதற்கு அப்பால் எழுவகை நிறங்களோடு பிளவுபட்டுத் தோன்றும்.இனி இவ்வுலகத்தும் ஏனையுலகங்களினும் உள்ள ஒவ்வொரு பொருளும், இவ் வெழுவகை நிறங்களுட் சில பல கலத்தலாற் பிறக்கும் அளவிறந்த நிறங்களில் தனித்தனியே தமக்கென உரிய நிறங்கள் உடையனவாய் இருக்கும். பொன்னின் நிறம் எக்காலத்தும் ஒருபடித்தாகவே தோன்றும். வெள்ளி ஈயம் இரும்பு காந்தம் முதலான பொருள்களின் நிறங்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/186&oldid=1624932" இலிருந்து மீள்விக்கப்பட்டது