பக்கம்:மறைமலையம் 3.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158



28. கடந்த பிறவியின் நினைவுகள்

இதுகாறும் எடுத்துக்காட்டிய வானநூல் உண்மைகளால் விசும்பின்கட் சுழன்று செல்லும் எண்ணிறந்த உலகங்களின் அளவை நோக்க நமது நிலவுலகம் ஒரு தினையளவு தானும் அவற்றிற்கு ஒவ்வாதென்பதும், அத்துணை மிகச் சிறிதான இது மக்களும் பிறவுயிர்களும் உயிரோ டுலாவுதற்கு இடமாய் அமைந்ததுபோலவே ஏனை மண்டிலங்களும் பல திறப்பட்ட உயிர்கள் நிலவுதற்கு இடமாகவே அமைந்துள்ளன வென்பதும், இச் சிறிய மண்ணுலகத்தைத் தவிர மற்றை யுலகங்களில் உயிர்கள் இல்லையென மறுத்தல் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் அனுபவத்திற்கும் முற்றும் முரணாமென்பதும் நன்கு பெறப்பட்டன. பெறவே, இந் நிலத்திலுள்ளவர்கள் இங்கெடுத்த உடம்பைவிட்டு வேறுலகங்களுக்குச் செல்லுவதும், வேறுலகங்களில் உள்ளவர்கள் அங்கங்கெடுத்த வுடம்பை விட்டு இந்நிலத்தில் வந்து பிறப்பதும் இடையறாது நிகழ்கின்றன. அவரவர் நினைவுக்குஞ் செயலுக்கும் ஏற்ற உடம்புகளும், அவ்வுடம்புகள் உலவுதற்குரிய உலகங்களும் இறைவன் திருவருளால் இயைக்கப்படுகின்றன. ஒருலகத்தில் ஒருவகையான உடம்போடு கூடியிருப்பவர்கள் அதே யுடம்போடு வேறு லகத்திற் சென்று இருக்கமுடியாது. ஆகையால் அந்தந்த மணடிலத்தின் தன்மைக்கேற்ற உடம்புகள் உயிர்களுக்கு இன்றியமையாது வேண்டற்பாலனவாகும். இதற்கு இம் மண்ணுலகத்தில் உள்ள நமதனுபவமே சான்று. நிலத்தில் வாழும் நாம் நீரில் வாழல் கூடுமோ? நீரில் வாழும் மீன் முதலிய உயிர்கள் நிலத்தில் இயங்குமோ? இன்னும் நீரில் உலவும் நீர்யாமையின் உடம்பின் அமைப்பையும் நிலத்தில் இயங்கும் நிலயாமையின் உடம்பின் அமைப்பையும் சிறிதுற்றுப் பாருங்கள். நீர்யாமை நீரில் நீந்துதற்கேற்றபடியாகத் தன் காலடிகளில் விரல் இல்லாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/191&oldid=1625165" இலிருந்து மீள்விக்கப்பட்டது