பக்கம்:மறைமலையம் 3.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

163



29. வரும் பிறவிகளின் நினைவுகள்

பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் மேற்றிசையில் நடந்த வெள்ளைக்காரர் சண்டையில் போர் வீரராய்ச் சேர்ந்திருந்த ஒரு வெள்ளைக்காரரும் அவர் தம் மகனார் இருவரும் ஓர் ஊரில் கூடாரத்தே தங்கியிருந்தனர். அவர்கள் தங்கியிருந்த ஊருக்கு நெடுந்தூரத்தே உள்ள மற்றோர் ஊரில் அவர்களின் குடும்பத்தார் இருந்தனர். ஒருநாட் காலையில் தந்தையார் தம் புதல்வர் இருவரையும் நோக்கி, “நும் தாயார் நேற்றிரவு இறந்து போனதாகக் கனாக் கண்டேன்,” என்றார்; அது கேட்டு மிகவும் ஆச்சரியம் உற்றவராகி அவர் தம் புதல்வர் இருவரும் “ஓ!ஓ! நானும் அங்ஙனமே கனாக் கண்டேன்”, என்று தனித்தனியே கூறினார். பின்னர் அவர் இதன் நிச்சயத்தை ஆய்ந்தபோது, அவர்கள் கனவிற் கண்ட படியே அப் புதல்வரின் அன்னையார் அன்றிரவில் உயிர் துறந்தாரென்பது புலனாயிற்று.

நியாயதுரந்தரர் ஒருவர் ஒருநாள்இரவிற் கடிதங்கள் எழுதி அவற்றைப் பன்னிரண்டரை மணிக்குத் தாமே எடுத்துக் கொண்டுபோய்த் தபாலிற் சேர்த்து வந்தார். வந்தபின் தாம் அணிந்திருந்த சட்டைகளைக் கழற்றி வைக்கையில், பெருந் தொகை பெறுதற்குரியதாய் அற்றைப்பகல் தாம் வாங்கி வைத்திருந்த பணச் சீட்டொன்றைத் தாம் இழந்துவிட்டதாகக் கண்டார். அவர் அதனை எங்குந் தேடிப்பார்த்தும் அது கிடைக்கவில்லை. பிறகு அவர் படுக்கைக்குப் போனார். தூங்கும் போது அப் பணச் சீட்டு தமது வீட்டுக்கு நெடுந்தூரம் அல்லாத ஓர் இடத்திற் சுருளாய்க் கிடப்பதாகக் கனவு கண்டார். உடனே அவர் உறக்கம் நீங்கி எழுந்து தெருவேபோய்த் தாம் கனவு கண்ட இடத்தில் பார்க்க அச் சீட்டுச் சுருளாய்க் கிடக்கக் கண்டு அதனை மகிழ்ந்து எடுத்துக் கொண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/196&oldid=1625178" இலிருந்து மீள்விக்கப்பட்டது