பக்கம்:மறைமலையம் 3.pdf/206

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
173



1.இருவகைத்துயில்

‘யோக நித்திரை’ என்னும் இச்சொற்றொடர் நம்மவர்களிற் பெரும்பாலார்க்குத் தெரிந்த தொன்றேயாம். திருப்பாற் கடலிலே திருமால் யோகநித்திரையில் அமர்ந்திருக்கின்றார் என்னும் உண்மையை நம்மவர்களில் அறியாதார் யார்? எல்லாவுயிர் களையும் வைத்துக் காப்பவரான திருமால் வெறும் நித்திரையில் இருக்கின்றார் என்று வழங்காமல்,அவர் யோக நித்திரையில் இருக்கின்றார் என்று வழங்கும் நுட்பத்தை எவரேனும் ஆழ நினைத்துப் பார்த்ததுண்டா? இல்லையென்றே பெரும்பாலும் சொல்லலாம். எண்ணிறந்த உயிர்களையெல்லாந் தமது வயிற்றினுள்ளே வைத்துக் காத்தருளும் அத்திருமால், பொது மக்களான நம்மைப்போல் துயில் கொள்கின்றார் என்று சொல்லின் அஃது எவ்வளவு பேதைமையாகும்! நாம் உறங்கும் போது நம்மை நாமே மறந்து, நம்மறிவை நாமே இழந்து, நம்மைச் சுற்றியுள்ள பொருள்களையும் அவற்றின் நிகழ்ச்சிகளையும் அறியும் வலிவற்று வெறுங்கட்டை போலவுங் கற்போலவுங் கிடக்கின்றேம் அல்லமோ? இங்ஙனங் கிடக்கும் நம்மைப் போலவே காக்குந் தெய்வமான திருமாலுந் தூங்கிக் கிடப்பரென்றால் அது பொருந்துமோ? இத்தகைய எண்ணங்கள் உண்டாகாமல் இருத்தற்கே திருமால் வெறும் நித்திரை செய்கின்றார் என்று உரையாமல்,அவர் யோக நித்திரையில் அமர்ந்திருக்கின்றார் என்று அதனை உண்மையான் உணர்ந்த ஆன்றோர் வழங்கி வருகின்றார்கள்.

அப்படியானால்,திருமால் செய்தருளும் யோக நித்திரைக்கும் நம்மனோர் அமிழ்ந்திக் கிடக்கும் வெறும் நித்திரைக்கும் வேறுபாடு என்னை என்றால்; நம்மனோர் கிடக்கும் வெறுந்துயில் அறியாமை என்னும் இருளிலே நடைபெறுவ தாகும்; திருமால் செய்தருளும் அறிதுயில் தூய அறிவு நிலையாய் உள்ள அருளிலே நிகழுவதாகும். மக்கள் முதலான உயிர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/206&oldid=1624237" இலிருந்து மீள்விக்கப்பட்டது