பக்கம்:மறைமலையம் 3.pdf/208

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

❖ யோக நித்திரை அல்லது அறிதுயில் ❖
175

அறியாமை இருளிலே தூங்கும். தூக்கமே எல்லா உயிர்களிடத்தும் பொதுவாகக் காணப்படுகின்றது; அருளிலே தூங்கும் தூக்கமோ உயிர்கள் எல்லாவற்றினிடத்தும் அங்ஙனம் பொதுவாகக் காணப்படவில்லை; என்றாலும் தவமுயற்சியி லுள்ள பெரியோர்களிடத்தும் புலவர்களிடத்தும் தேவர்களிடத்தும் அஃது உண்மையாகவே நிகழ்ந்துவருகின்றது. மெய்யறிவு முதிர்ந்த யோகிகளிடத்தும் அருளில் தூங்கும் தூக்கம் இடைவிடாது நிகழும் என்பதை “ஆங்கார முள்ளடக்கி ஐம்புலனைச் சுட்டெரித்துத், தூங்காமற் றூங்கிச் சுகம்பெறுவ தெக்காலம் என்னும் ஆன்றோர் திருமொழி இனிது தெரிவிக்குமாறு காண்க. அருளில் தூங்கும் தூக்கத்தையே 'தூங்காமல் தூங்குவது' என்பர், இருளில் தூங்கும் தூக்கத்திற் சிறிதாயினும் உயிர்களுக்கு அறிவு நிகழாமல் எல்லாம் வெறும் பாழாய் இருத்தலின் அது வெறுந் தூக்கம் என்று மட்டும் சொல்லப்படும்; அருளில் தூங்கும் தூக்கத்தில் உயிர்களுக்குச் சொல்லற்கரிய பேரொளியோடும் அறிவு விளங்குமாதலின் அது ‘தூங்காத் தூக்கம்' என்று சிறப்பித்துச் சொல்லப்படும்.

அவ்வாறாயின், அருளில் அறிவு விளங்கப்பெறும் அந்நிலையைத் ‘தூக்கம்’ என்று கூறுவது எங்ஙனம் பொருந்துமெனின்; ஒவ்வொரு நாளும் விழித்திருக்கையில் உயிர்களானவை பலதிறப்பட்ட முயற்சிகளில் உழன்று மிகவுங் களைத்துப் போகின்றன; இவ்வாறு பகற்காலம் எல்லாம் உழல்வதால் உண்ட ாகுங் களைப்புத் தீரும்பொருட்டு இராக்காலத்தில் தூக்கமானது வருகின்றது. இராக்காலத்தில் நன்றாய்த் தூங்கி எழுந்த பிறகு உயிர்கள் திரும்பவும் மிகுந்த சுறுசுறுப்பு உடையனவாய் மறுநாட் பகலில் திரும்பவும் பலதிறப்பட்ட முயற்சிகளில் செல்கின்றன. ஆகவே, தூக்கத்தினால் வரும் பயன் உடம்பின் வழியாக உயிர்க்கு வந்த களைப்பு நீங்கப் பெறுதலேயாம்.

உயிர் உடம்போடு கூடியிருக்கும் வரையில் இத்தூக்கம் இன்றியமையாது வேண்டப்படுவதாகும். உயிரின் அறிவு உடம்போடுகூடி வெளிமுகமாய் நடைபெறும் போது உடம்பின் உள்ளும் புறம்பும் அமைந்த எல்லாக் கருவிகளும் இடைவிடாது அசைதலால், உடம்பின் வலிவு மிகவுங் குறைந்துபோகின்றது. விளக்கு எரியும் போது தகழியிற் பெய்த நெய்யும் அதில் இட்ட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_3.pdf/208&oldid=1624268" இலிருந்து மீள்விக்கப்பட்டது